விண்வெளியில் இன்று – சந்திரயான்-1 (Chandrayaan-1) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயண தினம் இன்று (அக்டோபர் 22, 2008).

சந்திரயான்-1 (Chandrayaan-1) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் அக்டோபர் 22, 2008ல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பி.எஸ்.எல்.வி. சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது. பின்னர் விண்கலமானது தன்னகத்துள்ள முன்னுந்து அமைப்பின் துணைகொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திராயன் I விண்கலமானது சுற்றிவரக்கூடிய அமைப்பையும் நிலவில் இறங்கக்கூடிய அமைப்பையும் ஒருங்கே கொண்டிருக்கும்.இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும். சந்திராயன்-1ல் ஏற்றப்பட்டிருந்த வானியல்-விண்வெளியியல் நிறுவனம் நாசாவின் எம் 3 எனப்படும் நிலவுக் கனிமவியல் வரைவி (Moon Mineralogy Mapper), நிலவு மோதல் ஆய்வியின் மோதலை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் மூலம் நிலவின் பரப்பில் அதிக அளவிலான நீர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.பிஎஸ்எல்வி சி-மூன்று விண்கலத்தை அக்டோபர் 22, 2001ல் இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. முனைய துணைக்கோள் ஏவுகலம் (பி.எஸ்.எல்.வி., Polar Satellite Launch Vehicle, PSLV) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையமான “இஸ்ரோ” (ISRO) வினால் இயக்கப்படும் செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப்பாவிக்கமுடியாத இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பாகும். இதுவே இஸ்ரோவின் முதல் செயல்படத்தக்க ஏவு ஊர்தி ஆகும். இவ்விரிசினால் 1600-கிகி நிறையுடைய துணைக்கோள்களை 620 கிமீ ஞாயிற்றிசைவு துருவப்பாதையிலும் 1050-கிகி நிறையுடைய துணைக்கோள்களை புவிநிலை இடைப்பாதையிலும் செலுத்த இயலும். பி.எஸ்.எல்.வி.- வரிசை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது. செப்டம்பர் 2009 வரை பதினைந்து வெற்றிகரமான தொடர் ஏவுதல்களை நிகழ்த்தியுள்ளது. இதன் மாற்றுரு வடிவங்களில் ஒன்றான பி.எஸ்.எல்.வி – சி11 சந்திராயனை விண்ணில் செலுத்தப் பயன்பட்டது. இவற்றின் மூலம் 1994 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை 48 முறை செலுத்தப்பட்டதில் 46 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று 500கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் 319 செயற்கைக்கோள்கள் வெளிநாட்டினுடையதும், 109 இந்தியாவிற்குச் சொந்தமானதும் ஆகும்.அக்டோபர் 22, 1968ல் நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது. அப்பல்லோ திட்டம் என்பது 1961–1972 வரை, ஐக்கிய அமெரிக்க நாட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளிப்பறப்புத் திட்டமாகும். இது, தசாப்தம் 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கி, பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் அடையப்பட்டது. சந்திரனில், ஆரம்ப ஆள்மூல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது.அப்பல்லோத் திட்டம் அப்பல்லோ 7 முதல் அப்பல்லோ 17 வரையான, 11 ஆளேற்றிய பறப்புக்களை உள்ளடக்கியிருந்தது. இவையனைத்தும், புளோரிடாவிலுள்ள கெனடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டன. அப்பல்லோ 2 இலிருந்து அப்பல்லோ 6 வரை, ஆளில்லா சோதனைப் பறப்புகள். முதல் ஆளேற்றிய பறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்த அப்பல்லோ 1, ஏவுதளச் சோதனையொன்றின்போது தீப் பிடித்து, மூன்று விண்வெளிவீரர்களும் இறந்துபோயினர். முதல் ஆளேற்றிய பறப்பில் சற்றேர்ண் 1-B ஏவுவாகனம் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த பறப்புகள் அனைத்தும், கூடிய சக்தி வாய்ந்த சாடர்ன் V-ஐப் பயன்படுத்தின. இவற்றில் இரண்டு (அப்பல்லோ 7ம் அப்பல்லோ 9ம்) பூமிச் சுற்றுப் பாதைப் பயணங்கள். அப்பல்லோ 8ம் அப்பல்லோ 10ம் நிலாச் சுற்றுப்பாதைப் பயணங்கள். ஏனைய 7 பயணங்களும், சந்திரனில் இறங்கும் பயணங்களாகும். (இவற்றுள் அப்பல்லோ 13 தோல்வியடைந்தது.)அப்பல்லோ 7, அப்பல்லோ கட்டளை மற்றும் சேவைக் கூறைப் (CSM) புவியின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 8 CSM ஐச் சந்திரனின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 9, லூனார் கூறை (LM), புவியின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 10, லூனார் கூறை (LM), சந்திரனின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 11, ஆளேற்றிக்கொண்டு நிலவிலிறங்கிய முதற் பயணமாகும். அப்பல்லோ 12, சந்திரனில், குறித்த இடத்தில் சரியாக இறங்கிய முதற் பயணம் என்ற பெயரைப் பெற்றது. அப்பல்லோ 13, சந்திரனில் இறங்கும் முயற்சியில் தோல்வியுற்றதெனினும், பேரழிவாக முடிந்திருக்கக்கூடிய பறப்பினுள் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பாகப் பயணக்குழுவைப் பூமியிலிறக்கி வெற்றிகண்டது. அப்பல்லோ 14, சந்திர ஆய்வுப் பயணத் திட்டத்தை மீண்டும் துவக்கியது. அப்பல்லோ 15, சந்திர ஆய்வுப்பயண வல்லமையில், நீண்ட தங்கு நேரம் கொண்ட LM, மற்றும் நிலவில் திரியும் வாகனம் மூலம், புதிய மட்டத்தை அறிமுகம் செய்தது. அப்பல்லோ 16 தான் சந்திரனின் உயர் நிலத்திலிறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். அப்பல்லோ 17, அறிவியலாளரான, விண்வெளி வீரரைக் கொண்ட முதற் பயணமும், திட்டத்தின் இறுதிப் பயணமுமாகும்.Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.