Home செய்திகள்உலக செய்திகள் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அனைத்துலக எழுத்தறிவு தினம் இன்று (செப்டம்பர் 8)

எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அனைத்துலக எழுத்தறிவு தினம் இன்று (செப்டம்பர் 8)

by mohan

அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965ல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும். உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

யுனெஸ்கோவின் “அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)” அறிக்கையின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆப்பிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.

கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால்தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை, அவசியம், கட்டாயம். ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். இது இன, மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

2011 சென்சஸ் கணக்கின் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.4 சதவீதமாக உள்ளது. இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 6.9 சதவீதம் அதிகம். எழுத்தறிவில் கேரளா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. நாட்டில் எழுத்தறிவு சதவீதம் ஓரளவுக்கு அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!