Home செய்திகள் தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓஎன்ஜிசி., மீத்தேன் ஆய்வுப் பணிகளை கைவிடுக.வைகோ அறிக்கை

தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓஎன்ஜிசி., மீத்தேன் ஆய்வுப் பணிகளை கைவிடுக.வைகோ அறிக்கை

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் – மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன்குளம் என்ற ஊர் சங்க காலத்தில் புகழ்பெற்ற வணிக நகரமாக விளங்கியது என்பது இப்பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தியபோது கண்டறியப்பட்டது.இதனை தொடர்ந்து அழகன்குளம் பகுதியில் 1986இல் அகழ்வாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் 1990 தொடங்கி 2015 வரை ஏழு கட்டங்களாக அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகளின் மூலம் தொல்பழங்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், கண்ணாடி மணிகள், இரும்புக் கருவிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவையும், மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை உறுதி செய்யும் அரியவகை மண்பாண்டங்கள், நாணயங்கள், தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த மண்பாண்டங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. 2016 இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் பகுதியில் விரிவான அகழ்வாய்வு பணிகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டார் .

அதன்படி அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழர்கள் பயன்படுத்திய அரியவகை பொருள்கள் கிடைத்தன. கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பழங்கால பொருட்களைவிட தொன்மை சிறப்பு மிக்க பல அரிய பொருட்கள் இங்கு கிடைத்துள்ளன. வைகை ஆற்றின் முகத்துவாரத்தில் அழகன்குளம் மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகள் அமைந்துள்ளதால் இலக்கியங்களில் காணப்படும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புடன் விளங்கிய பாண்டியர்களின் துறைமுகமான மருங்கூர்பட்டினமாக இருக்கக்கூடும் என்றும் கருதப் படுகிறது.

அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13000 பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.பழங்கால சிறப்புகளை மண்ணில் புதைத்து வைத்திருக்கும் அழகன்குளம் ஆற்றங்கரை பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து மீத்தேன் எரிவாயு ஆய்வு மேற்கொள்ள முனைந்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த முகத்துவாரத்தை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆய்வுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா காலத்தில் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், மத்திய அரசின் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி மீண்டும் இந்தப் பகுதியில் மீத்தேன் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முனைந்திருக்கிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டு வாழ்க்கையையும், கடல் கடந்த நாடுகளில் தமிழர்கள் நடத்திய வணிகத்தையும் பறைசாற்றும் ஆதாரங்கள் புதைந்து கிடக்கும் அழகன்குளம் பகுதியை ஓஎன்ஜிசி எரிவாய்வு ஆய்வுப் பணிகள் மூலம் சிதைத்து விட ஒரு போதும் அனுமதிக்க முடியாது.மேலும் கடலோடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு ஆய்வுப் பணிகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.அழகன்குளம் ஆற்றங்கரை பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் மீத்தேன் ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!