Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பயணம் – 6, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை….

பயணம் – 6, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை….

by ஆசிரியர்

முன்னுரை:-

பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர்.  ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும்.  இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு வர உள்ளது.  உங்களுடைய கருத்துக்களை கட்டுரையின் ஆசிரியரை  9443440950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

பயணம் தொடர்கிறது….

எல்லா பயணங்களும் ஏராளமான பாடங்களை போதிக்கிறது. ஆன்மீகப்பயணங்கள் மனிதனுக்கு அமைதியையும், நிம்மதியையும், தருகிறது. தவறுகளாலேயே சூழப்பட்டிருக்கிற இந்த உலகில் மிக எளிதாக தவறுகள் செய்துவிட்டு பிரச்சினைகளாலும், நோய்களாலும், இழப்புகளாலும், மனிதன் அவதியுறும் போது இறைவனை நோக்கி மனிதனின் கவனம் திரும்புகிறது.

நேர்ச்சைகளும்,  புனிதத் தலங்களுக்கு சென்று நேர்ச்சைகளை நிறைவேற்றி பாவங்களை நீக்கிகொள்ளலாம் என்ற மனநிலை மனிதனுக்கு ஆறுதலையும், நிம்மதியையும்  தருகிறது. இந்துக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் செல்லும் காசி பயணமும், அங்குள்ள கங்கைஆற்றில் மூழ்கி தங்கள் பாவங்கள் தொலைந்து விட்டதாக மன ஆறுதல்கொள்வதும் மனிதனின் வரங்கள்.

உலகக் கடமைகளை முடித்து விட்ட இந்துக்களும், வயதான முதியவர்களும் காசிக்கு சென்று தாங்கள் இறப்பதை புனிதமாக கருதுகின்றனர். அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டும் அவர்களின் அஸ்திகள் கங்கை நீரில் கரைக்கப்பட்டும் வருகின்றன.

பிற இடங்களின் இறப்பவர்களின் எரிந்த சாம்பல்களையும்,  அஸ்தி என எடுத்துவைத்து கங்கையில் சென்று கரைப்பவர்களும் உண்டு. கங்கையில் அஸ்தி கரைக்கப்பட்டால் முக்தியும், மோட்சமும்  (சொர்க்கம்) கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. காசி துறவிகள் உலவும் இடமாகவும் உள்ளது. இங்குவாழும் அகோரிகள் என்னும் ஒருவகை துறவிகள் இறந்த மனித உடல்களை உண்ணுபவர்களாகவும் உள்ளார்கள்.

இமயமலையின் அடுக்குகளில் அமைந்திருக்கும் அமர்நாத் கோயிலின் பனிலிங்கத்தை வணங்க வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமமான பிரயாண பாதைகளின் வழியாக பயணம் சென்று தரிசனம் செய்கின்றனர்.

உலகின் பணக்கார கடவுள் என்று அறியப்படுகிற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மணிக்கணிக்கில் காத்திருந்து தரிசிக்கிறார்கள். காணிக்கைகள், உண்டியல்களில் தங்கமாக, வைரமாக, நகைகளாக, கரன்ஸிகளாக, பொற்காசு குவியல்களாக கொட்டுகிறார்கள். பணத்தை எண்ணுவதற்கு பணம் எண்ணும் இயந்திரங்களை பயன்படுத்தும் அளவிற்கு வருமானம் குவிகிறது. வங்கிகளின் அதிகாரிகளை பார்ட்டைம் வேலைக்கு பணி அமர்த்தி பணத்தை எண்ணுகிறார்கள். திருப்பதியின் பிரசாதமான இலட்டு உலகப்பிரசித்து பெற்றது. பணம் கொடுத்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இலட்டு உடனடியாக கிடைக்காது.

தமிழர்கள் கொண்டாடுகிற முருகனின் அறுபடை வீடுகளான பழநி திருச்செந்தூர் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களை நோக்கிய இந்து பக்தர்களின் பயணம் அவர்களின் பக்தியை வெளிப்படுத்துகிறது. பழநியின் பஞ்சாமிர்தம் என்ற பிரசாதமும் மிகுந்த புகழ்பெற்றது.

கால்நடைப் பயணங்களாக மேலும் நேர்ச்சைகளினால் அலகுகள் குத்திக்கொண்டு வெறும் கால்நடையாக நடந்து தங்களை வருத்திக்கொண்டு கோயில்களை நோக்கி பயணிக்கிறார்கள். இன்னும் சிறு தெய்வ வழிபாடுகளாக தங்கள் குலக்கோவில்களுக்கு சென்று பொங்கல்படைத்து வணங்கி வருபவர்களும் உண்டு.  பால்குடங்கள், பன்னீர்குடங்கள், காவடிகள் என்று தெய்வங்களுக்காக தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்ற செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே செல்கிறது.

சபரிமலை அய்யப்பனை  வணங்கி வர வருடம்தோறும் விரதங்கள் இருந்து மாலைபோட்டு, ஐதீகமாக சபரிமலை சென்று மகர ஜோதியை வணங்க பெரும்கூட்டம் கூடுகிறது.  பலவருடங்கள் தொடர்ந்து சென்று வருபவர்கள் இதை ஒரு பெருமையாகவே சொல்லும் அளவிற்கு சபரிமலையின் மவுசு கூடியிருக்கிறது.

பலசமய மக்களின்  நம்பிக்கைகளையும் புனித பயணங்களையும் தொடர்ந்து பேசுவோம்..!

இறைவன் நாடட்டும்…!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!