Home செய்திகள் அவசர உதவி எண், ‘112’ டிசம்பரில் அமல்..

நாடு முழுவதும், அவசர உதவிக்கு, ‘112’ என்ற எண்ணில் அழைக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்தில், டிசம்பரில் நடைமுறைக்கு வருகிறது.

போலீஸ் உதவிக்கு, 100; ஆம்புலன்ஸ் தேவைக்கு, 108; குழந்தைகளுக்கு உதவிட, 1098; மூத்த குடிமக்களுக்கு, 1253; தீயணைப்பு வாகனத்தை அழைக்க, 101 என, ஏராளமான அவசர உதவி எண்கள் செயல்பாட்டில் உள்ளன. இதனால், பொது மக்களிடம் குழப்பம் நீடிக்கிறது. இந்த அழைப்புகளை கையாளுவதில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு பணிச்சுமையும், செலவும் அதிகமாகிறது.இதனால், மத்திய அரசு, நாடு முழுவதும், அவசர உதவிக்கு, 112 என்ற, ஒரே எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

இதை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர, மாநில தலைமை செயலர் கள் அடங்கிய, உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

ஆலோசகர்களாக, தொழில்நுட்ப பிரிவு, கூடுதல், டி.ஜி.பி.,க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.முதற்கட்டமாக, தமிழகத்தில், ‘112’ எண்ணுக்கு, ‘டயல்’ செய்யும் நடைமுறையை அமலுக்கு கொண்டு வர, மத்திய அரசு, ஒன்பது கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இதையடுத்து, டி.ஜி.பி., அலுவலக, தொழில்நுட்ப பிரிவு உயர் அதிகாரிகள், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையின், அவசர உதவி எண்களை ஒருங்கிணைக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

அவசர உதவிக்கு, அமெரிக்காவில், 911; ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், 112 என்ற எண்ணுக்கு, ‘டயல்’செய்தால் போதும்; அனைத்து உதவிகளும் கிடைத்து விடும். அதேபோல், நம் நாட்டிலும், அனைத்து அவசர உதவிகளும், 112 எண்ணுக்கு டயல் செய்தால் கிடைக்கும் வகையில், மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.தமிழகத்தில் ஏற்கனவே, அவசர உதவிக்கு, போலீசாரை அழைக்க, 100க்கு, டயல் செய்யும் வசதி உள்ளது. மேலும், பெண்களின் பாதுகாப்புக்கு, ‘காவலன் – எஸ்.ஓ.எஸ்., மற்றும் காவலன் டயல் – 100’ எனும், ‘மொபைல் ஆப்’கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக, சென்னை எழும்பூரில், முழுவதும் கணினிமயமாக்கப்பட்ட, மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.தற்போது, 112க்கு டயல் செய்தாலும், இந்த மையத்தில் இருந்து, அழைப்புகளை கையாளும் வகையில் வசதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து அவசர உதவி எண்களையும், 112க்கு கீழ் கொண்டு வரும் பணி நடந்து வருகிறது.

தற்போது, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைகளின்,அவசர எண்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது.தீயணைப்பு துறைக்கு, ‘வாய்ஸ் ரெக்கார்டிங், ஜி.பி.எஸ்.,’ வசதிகளுடன் கூடிய, அதிநவீன, ‘டேப்லெட்’ கருவிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.மொபைல் போனில், ‘சிம் கார்டு’ இருந்தாலும் இல்லாவிட்டாலும், சிக்னல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், 112க்கு, டயல் செய்தால் போதும். மேலும், ‘பவர் பட்டனை’ மூன்று முறை அழுத்தினாலோ, சாதாரண மொபைல் போனில், 5 அல்லது 9 என்ற எண்களை, தொடர்ந்து அழுத்தினாலோ, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, அழைப்பு சென்று விடும்.தமிழகத்தில், 112க்கு டயல் செய்யும் முறை, டிசம்பருக்குள் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், நாட்டில், 100 மற்றும் 101 உள்ளிட்ட அனைத்து அவசர அழைப்பு எண்களும், வழக்கத்தில் இருந்து மறைந்து விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தாமதமாகுமா?

அவசர உதவி எண்களை, 112ன் கீழ் ஒருங்கிணைக்கும் பணியில், துறைகளுக்கு இடையே புரிதல் குறைவாக உள்ளது. இதனால், குளறுபடி ஏற்படுமோ… என்ற அச்சமும் நீடிக்கிறது. எனவே, காவல் துறையினர், அனைத்து பொறுப்புகளையும் ஏற்று, பிற துறை அதிகாரிகளுக்கு, விளக்கம் அளித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!