இந்த வருட ஷார்ஜா புத்தக கண்காட்சி கண்ட ஈர்ப்பு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்..

ஷார்ஜா புத்தகக் கண்காட்சி உலகின் மூன்றாவது மிகப்பெரிய கண்காட்சியாகும். இந்த கண்காட்சியில் கிட்டத்தட்ட 64 நாடுகள் வருடா வருடம் பங்கேற்கின்றன. மேலும் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பதிப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். சார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் பதினைந்து லட்சம் புத்தகங்களுக்கும் மேலாக இடம்பெறும்.

——————————————————————————

“என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்ப, திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல் உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்து விட முயன்றதன் விளைவுதான் என் எழுத்துக்கள்”

-எஸ்.ராமகிருஷ்ணன்

——————————————————————————

இந்த வருடம் திமுக செயல் தலைவர் உட்பட பல தமிழகம் சார்ந்த இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் கலந்து கொண்டார்கள். இந்த கணகாட்சியில் அனேக மக்களின் கவனத்தை ஈர்த்தவரில் முக்கியமானவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இவர் தமிழ் இலக்கியத்தின் சார்பாக சர்வதேச எழுத்தாளர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் நவம்பர் 3ம் தேதி மாலை புத்தக அரங்கத்தில் துணையெழுத்து பற்றி ஆற்றிய உரைக்கு அரங்கு நிரம்பி வழிந்தது, வெளியிலும் பல வாசகர்கள் குவிந்திருந்ததை பார்த்து அடுத்த வருடம் பெரிய இடம் ஒதுக்கி தருவதாக ஏற்பாட்டாளர்கள் கூறியது,  இந்நிகழ்ச்சியின் வெற்றியாக கூறலாம்.

இவரைப்பற்றி அமீரகத்தில் உள்ள இலக்கிய ஆர்வலர்  கனவு பிரியன் குறிப்பிடுகையில், “கதை சொல் அல்லது செத்து மடி “ என்ற வார்த்தைகளைக் கொண்டே அந்தத் தேசாந்திரியின் சந்திப்பை ஆரம்பம் செய்கிறேன். 1001 இரவுகள் புத்தகத்தைப் பற்றிப் பரவலாக ஒரு ஸ்திரிலோலனின் கதை போலச் சித்தரித்த போது “ ஒருத்தி கதை சொன்னால் அவளைக் கொல்லாமல் விட்டுவிடுவானா ஒரு மன்னன்…? அவளின் உடல் சுகத்தை விட அவள் கூறிய கதைகள் அத்தனை இன்பமானதா…? என்ற கேள்வியை எழுப்பி, ஒரு கதை சொல்லியின் மகத்தான குணத்தை, அவன் இவ்வுலகில் பரப்பும் கருத்தியலை உரக்க கூறியவர் சம காலச் சிறந்த எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். “ ஒரு ஊருல ஒரு யானை இருந்துச்சாம் …….” என்ற திண்ணை காலத்து தாத்தப்பாட்டிகள் குறைந்து விட்ட காலத்தில் இலகுவாக இலக்கியத்தோடு சேர்ந்த வாழ்வின் தத்துவார்த்த விஷயங்களைக் கூரியபடி செல்லும் கதை சொல்லிகளின் அவசியம் உலகில் மிக்க முக்கியமானதாக உள்ளது. சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமித்து விட்ட இன்றைய தொழில் நுட்ப உலகில் “ நான் என்ன எழவுக்கு ஒரு பத்தியை எனக்கான நேரத்தை விரயம் செய்து வாசிக்க வேண்டும் என எண்ணம் தோன்றி விட்ட சமூகத்தில். தொன்மை, படிமம், துயரவிவரணை, கவியுருவகம், மறுதலிப்பு, மீட்டுறுவாக்கம் போன்ற வார்த்தைகள் கொண்ட எழுத்துக்களைக் கண்டாலே ஒவ்வாமை வந்து தூரமாய் விலகி ஓடும் ஆரம்பக் கட்ட வாசகனை மிரட்டும் இலக்கிய மாபியாக்களுக்கு இடையில் கதைகள் பற்றிய, எழுத்தாளர்கள் பற்றிய, அவர்களின் எழுத்துக்கள் பற்றி, உலக இலக்கியம் பற்றிய பிசிறில்லாத அவரின் தொடர்ச்சியான சுவையான பேச்சின் மூலம் என்னைப் போன்ற சாதாரணமானவனையையும் இலக்கியம் ரசிக்கச் செய்த எஸ்.ராவை உலகப் புத்தகக் கண்காட்சிக்காகச் சார்ஜா வந்திருந்தவரை அபுதாபிக்கு அழைக்க எங்களின் விருப்பம் ஏற்றுத் தோழர் நந்த குமாருடன் அபுதாபியின் புகழ் பெற்ற பள்ளியான “ஷேக் செய்யத் மாஸ்க்“ வந்து சேர்ந்த போது மணி இரவு எட்டு. நிலவும் கூட முழு வேடம் தரித்துப் பௌர்ணமி என்ற பெயரில் எஸ்.ராவைக் காண எங்களுடன் காத்திருந்தது. சிறிய அறிமுகத்திற்குப் பிறகு வந்திருந்த நண்பர்கள் பத்து பேரும் எஸ்.ராவுடன் சேர்ந்து நடக்க இலக்கியத்துடன் நட்பும் வளர்ந்துள்ளது.

நவீன உலகம் என்ற பெயரில் எழுத்தும், வாசிப்பும் குறைந்து வரும் இவ்வேளையில் எஸ்.ரா போன்ற எழுத்தாளர்கள் சமுதாயத்துக்கு மிகவும் அவசியம். இவரின் வரவை அமீரகத்துடன் நிறுத்திவிடாமல், இவரின் இலக்கியத்தையும், பேச்சாற்றலையும் தாய் மண் கடந்து உலகில் பரந்து கிடக்கும் அனைத்து தமிழர்களையும் சென்றடைவதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும்.

புகைப்படத் தொகுப்பு

 

புகைப்பட உதவி:-சுபுஹான் பீர் முஹம்மது.