சுற்று சூழலை பாதுகாக்குமாஅல்லது பாழாக்குமா? நதிகளை பாதுகாக்கும் பேரணி-

நதிகளை பாதுகாப்போம் என்ற அடிப்படையில் சத்குரு என்று அழைக்கப்படும் ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கன்னியாகுமரி முதல் ஹிமாலய வரை வாகனம் மூலம் விழிப்புணர்வு பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

தற்போதய சூழலில் இது போன்ற விழிப்புணர்வு பேரணி பாராட்டுக்குறியதாக இருந்தாலும் அவர் பேரணிக்காக தேர்ந்தெடுத்த நான்கு சக்கர பென்ஸ் (Benz G63 AMG) வாகனம் சுற்றுப்புறச்சூழலை அதிக அளவில் பாதிக்கும் அளவுக்கு எரிவாயு செலவாகும் என்பதால் மக்கள் மத்தியில் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

நதிக்கரை ஓரத்தில் மரங்களை நடுவதன் மூலம் நீர் நிலைகளை பாதுகாக்க முடியும் என்பதை மக்களுக்கு வலியுறுத்தும் விதமாக இப்பேரணியின் முக்கிய நோக்கமாக உள்ளது. சத்குரு ஓட்டுவதற்காக பச்சை வர்ணம் பூசப்பட்ட விளையாட்டு சாகசத்துக்கு பயன்படுத்தப்படும் (Benz G63 AMG) பென்ஸ் வாகானம் ஒன்றை பிரத்யேகமாக ஏற்பாடு செய்துள்ளனர். அவரை பின் தொடர்ந்து 20 மகேந்திரா கார்கள் செல்கிறது. சுமார் 7000 கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, 20 நகரங்களையும், 16 மாநிலங்களையும் பேரணி கடந்த செல்ல திட்டமிட்டுள்ளனர்.

சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வழிவகுக்கும் விழிப்புணர்வு பேரணியாக இருந்தாலும்,ஜக்கி வாசுதேவ் பயன்படுத்தும் (Benz G63 AMG) வாகனம் 7000 கிலோ மீட்டர்கள் ஓடுவதனால் 2,254 kgs CO2 வை புகையாக வெளியேற்றுகிறது. அதாவது ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 322 கிராம் CO2 வை புகையாக கக்குகிறது. ஆனால் ஒரு மரம் வருடத்துக்கு 12 கிலோ Co2 வை உறிஞ்சுகிறது அதாவது நாள் ஒன்றுக்கு 33 கிராம் CO2 வை மட்டுமே உறிஞ்சும் தன்மை கொண்டது. இந்நிலையில் பேரணிக்காக பயன்படுத்தப்படும் சொகுசு கார்களால் வெளிப்படும் புகையை உறிஞ்சுவதற்கு எத்தனை மரங்கள் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு பார்த்தால் தலையே சுற்றிவிடும்.

நீர் நிலைகளை பாதுகாக்க மரத்தை வளர்க்க உதவும் பேரணியினால் ஏற்படும் கார்பன்டை ஆக்சைடை மூலம் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிப்பு அடைகிறது. பசுமையை வலியுறுத்தும் வகையில் நடை பயணம், மிதி வண்டி பயணம் மூலம் சுற்றுபுற ஆர்வலர்கள் பல வகையான விழிப்புணர்வுகளை முன்னெடுத்தி வரும் நிலையில் இது போன்ற ஆடம்பரம்பான பேரணிகள் சுற்று சூழலுக்கு பயனளிக்குமா? அல்லது சுற்று சூழலை சீரழிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.