100 கிராம் அமுல் தயிரின் கொள்முதல் விலை ரூபாய் 972/-மட்டுமே-தகவல் அறியும் சட்டம் மூலம் மும்பை ரயில்வே கேன்டீன் ஊழல் அம்பலம்…

மும்பையை சார்ந்த சமூக ஆர்வலர் அஜய் போஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரயில்வே சமையல் பிரிவுக்காக கொள்முதல் செய்யப்பட்ட தயிர், உப்பு, பருப்பு போன்ற பொருட்களின் விலையை அறியும் நோக்கில் தாக்கல் செய்த மனுவின் மூலம் மெகா ஊழல் அம்பலமாகியுள்ளது.

கடந்த வருடம் ஜூலை 2016 ல் அஜய் போஸ் செய்த மனுவுக்கு ரயில்வே கேன்டீன் அதிகாரிகள் எந்த வித பதில் அளிக்காத நிலையில் மேல் முறையீடு செய்தார். அதனை தொடர்ந்து 15 நாட்களுக்குள் பதில் தர வேண்டும் என மேல் முறையீட்டு அதிகாரி ரயில்வே நிர்வாகத்துக்கு ஆணையிட்டு பல மாதங்கள் ஆகியும் கூட பதில் வராததால் அதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அதனை சரி செய்ய மத்திய ரயில்வே நிர்வாகம் கால தாமதம் செய்வதாக உணர்ந்த அஜய் போஸ் மீண்டும் ஒரு மனுவை தொடுத்து அதில் வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்மை நகரத்தின் மத்திய ரயில்வே உணவகம் நஷ்ட கணக்கை அதிகமாக காட்டியதை அறிந்த சமூக ஆர்வலர் அஜய் போஸ் கேள்வி கணைகளை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தொடுத்ததனால் உண்மை நிலவரமும், பொது நிதிகள் முறைகேடாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது..

மேல் முறையீடு மனுவுக்கு மத்திய ரயில்வேயின் பொது தகவல் அலுவலர் அளித்த பதில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்தது. ஏனேன்றால் ஒரு லிட்டர் அமுல் தயிர் ரூபாய்.9720/-க்கும், சமையல் எண்ணை ஒரு லிட்டர் ரூபாய்.1,241/-க்கும் கொள்முதல் செய்ததாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சாதரணமாக 25/-க்கு வாங்க வேண்டிய 100 கிராம் அமுல் தயிரை ரூபாய் 972/- விலை கொடுத்து வாங்கியதாக கணக்கு காட்டியதன் மூலம் மெகா ஊழல் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. அதனால் இலாபகரமாக செயல்பட வேண்டிய மத்திய ரயில்வே கேண்டீன் அதிக நஷ்டத்தை சந்திக்க நேரிட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் 2016ல் நடந்த கொள்முதல் படி ஒரு பாக்கெட் டாட்டா உப்புவின் விலை ₹.49/- க்கு, அதாவது 3மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  அதில் வெங்காயம், உருளை போன்ற பொருட்களின் விலை மட்டுமே அப்போதய சந்தையின் விலைக்கு ஒத்து போவதாக தகவல் அறியப்படுகிறது.

கொள்முதல் விலையில் செய்த முறைகேட்டை மறைக்க சரியான அளவிற்கு பதிலாக உணவு தயரிக்க அதிகமான பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தவறான கணக்கும் காட்டபட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு  வந்துள்ளது:

இதுகுறித்துப் கூறிய ரெயில்வே கோட்ட மேலாளர் ரவிந்திர கோயல், ”இது தட்டச்சுப் பிழையாகத்தான் இருக்க வேண்டும். இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளேன்” என்று கூறி உள்ளார்.

விலை உயர்வு குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ரெயில்வே அதிகாரி கூறும்போது, ரெயில்வே நஷ்டத்தில் இயங்குவதற்கு இத்தகைய ஊழல்களே காரணம். இத்தகைய சம்பவங்கள் உரிய முறையில், தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது மக்களுக்கான சட்டமாகவும் ஊழலை வெளிச்சம் போட்டு காட்ட உறுதுணையாக இருக்கும் என்பதால் அதன் மூலம் உண்மையை கண்டறிந்து ஊழலை ஒழிக்க முயற்சிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

கீழக்கரையிலும் சட்டப்போராளிகள் என்று இளைஞர்கள் குழுவாக இணைந்து ஊரில் போடப்பட்டுள்ள சாலைகள், கால்வாய் மூடிகள் மற்றும் பல அரசாங்க பணிகளில் சில குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பல கோடி கணக்கில் லாபம் அடைந்துள்ளதை சமீபத்தில் பொது மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது, நமக்கு கண் முன் நடந்த உண்மை உதாரணமாகும்.  இதுபோல் ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து விளக்கங்களை பெற்று கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஊழல் செய்ய நினைக்கும் அதிகாரிகளுக்கும் மனதில் ஒரு பயம் உண்டாகும்.  கேள்வி கேட்கும் சமுதாயமே சிறந்த சமுதாயம் என்ற வாக்கும் உண்மையாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.