கீழக்கரையில் ‘டெங்கு கொசு’ உற்பத்தியாகும் பகுதி கண்டுபிடிப்பு – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..?

dav

கீழக்கரையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. 3 வது வார்டு புதுக் கிழக்குத் தெரு மற்றும் 8 வது வார்டு பழைய குத்பா பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த டெங்கு கொசு எங்கு உற்பத்தியாகிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. தற்போது இந்த டெங்கு கொசுவின் உற்பத்தி தொழிற்சாலை கீழக்கரை நகரின் மைய பகுதியான லெப்பை டீக்கடை அருகாமையில் உள்ள நகராட்சி தண்ணீர் தொட்டியில் இருந்து வழிந்தோடும் நல்ல தண்ணீரில் இருந்து தான் உருவாவது பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சட்டப் போராளி. ஆசிரியர் அஹமது சுஹைல் கூறுகையில் ”இந்த தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியாக்கப்படும் நீர் இந்த பகுதி முழுவதும் ஓடி பல நாள்கள் தேங்கி கிடக்கிறது. கீழக்கரை நகராட்சி பொதுமக்களையும், சின்னஞ் சிறு பள்ளிக் குழந்தைகளையும் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாக்கும் விதமாக உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த தண்ணீர் தொட்டியில் இருந்து செல்லும் நீரை முறையாக கால்வாய்க்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கீழக்கரை பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்தார்.

”இந்த டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவது நல்ல தண்ணீரில் தான்” என கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் கடந்த ஆண்டு அறிவியல் சான்றுகளுடன் பள்ளிக் கூடம் பள்ளிக் கூடமாக சென்று மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.