Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!.. வைகோ அறிக்கை.. வீடியோ..

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!.. வைகோ அறிக்கை.. வீடியோ..

by ஆசிரியர்

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதியசரர் சிவஞானம், நீதியரசி பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு வழங்கிய தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

2018 மே 22 ஆம் தேதிக்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான நிலையை தமிழ்நாடு அரசு எடுக்காமல் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இருக்காது. 13 பேர் காவல்துறையினரால் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள்.

13 பேர் சிந்திய இரத்தம், அவர்களின் உயிர்த் தியாகம் நீதியைக் காப்பாற்றி உள்ளது. ஆனால் அவர்களை மனித வேட்டையாடிய காவல்துறையினர் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது, அந்தப் படுகொலைக்கு மாநில அரசே முழு காரணம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இப்போதாவது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினரை பணியிடை நீக்க நடவடிக்கை எடுத்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இந்த வழக்கும் தமிழ்நாடு அரசு காவல்துறையிடமிருந்து மாற்றப்பட்டு, மத்திய குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு கிணற்றில் போட்டக் கல்லாக இருக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்தப் படுகொலை குறித்து மக்கள் கண்காணிப்பகம் நிர்வாகச் செயலாளர் ஹென்றி திபேன் அவர்கள் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளையும், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமைக் காவல் அதிகாரிகளையும், தடயவியல் நிபுணர்களையும் கொண்டு தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், அனைத்துத் தரப்பினரையும் விசாரித்து 2400 பக்க அறிக்கையை மனித உரிமை ஆணையத்திலும் தாக்கல் செய்துள்ளனர்.

ஹென்றி திபேன் குழுவினர் அறிக்கை சி.பி.ஐ.யிடமும் கொடுக்கப்பட்டது. மக்கள் உள்ளம் எரிமலையானதைக் கண்டு, தன்னுடைய நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றிக்கொண்டு, நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர் நிலை எடுத்தது.

சுற்றுச் சூழலைப் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எந்தச் சூழலிலும் அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சரவையைக் கூட்டி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. கொள்கை முடிவாக அறிவிக்கவும் இல்லை. இப்போதாவது தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி, அம்மாதிரியான கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது. ஆனால் 13 பேர் படுகொலைக்கு ஒரு சதவிகிதம்கூட நீதி கிடைக்கவில்லை. இதற்கு மாநில, மத்திய அரசுகளைக் குற்றம் சாட்டுகிறேன்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்ற தீர்ப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 26 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. துளியளவும் சமரசத்திற்கு இடம் கொடுக்காமல் மக்கள் மன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நானே வாதங்களை எடுத்துவைத்துள்ளேன்.

இது நீதிக்குக் கிடைத்த வெற்றி; மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!

வைகோ பொதுச்செயலாளர் மறுமலர்ச்சி தி.மு.க. ‘தாயகம்’ சென்னை -8 18.08.2020

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!