வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவில்பட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டன. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்மிகு நீலாதேவி – பூதேவி உடனுறை அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில் நடை இன்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, திருப்பள்ளி மற்றும் திருவனந்தல் பூஜை நடைபெற்றது. அதனையடுத்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 6.30 மணி முதல் 12 மணி வரை அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக வந்து சுவாமி, நம்மாழ்வாருக்கு காட்சி கொடுத்தார்.
இரவு கருட வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியராஜன், கோயில் தலைமை எழுத்தர் ராமலிங்கம், ஜனக்கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா, தொழிலதிபர் ஆர்.வி.எஸ்.துரைராஜ், மண்டகப்படிதாரர் சபரிசங்கர், கம்மவார் மகளிர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஆழ்வார்சாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி :- அஹமது புகைப்படம்:- சாதிக்
You must be logged in to post a comment.