உசிலம்பட்டி அருகே சின்னகட்டளை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சிட்குட்பட்ட சின்னகட்டளை கிராமத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கொரோனாவிற்கு விதிக்கப்பட்ட அரசின் விதிமுறைகளின் படி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் பங்கேற்றது. ஒவ்வொரு சுற்றிற்கும் தலா 50மாடுபிடி வீரர்கள் களமிறங்கின. ஒவ்வொரு சுற்றும் சுமார் 45 நிமிடங்கள் போட்டி நடைபெற்றது. இதில் காளைகளுக்கு வழங்கப்பட்ட டோக்கன் முறைப்படி வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், சைக்கிள், குக்கர், பேன், மிக்ஸி, எல்இடி டிவி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுப்போட்டியில் மொத்தம் 650 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்ற 5மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்ட நிலையில் மருத்துவகுழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். இதில் பேரையூர், உசிலம்பட்டி வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

உசிலை சிந்தனியா