அனுமதி பெறாமல் நடத்தப்படும் தனியார் தண்ணீர் நிறுவனத்துக்கு மக்கள் எதிர்ப்பு-கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்..

பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் என்ற மீனவ கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களுக்கும் ஆதாரமாக விளங்கக்கூடிய அன்ணை ஊரணியை அழிக்கும் வகையில் கடந்த 2002 ஆண்டு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் கடல் நீரை தண்ணீராக மாற்றி வியாபாரம் செய்யும் சவுத் கங்கா என்ற தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனம் கிராமத்தில் நுழைந்தது. இந்நிறுவனத்திலிருந்து வெளியேறும் உப்பு நீர் மற்றும் கழிவு நீர் அன்ணை ஊரணியில் கலக்கப்பட்டு அதன் தண்ணிரையே அனைத்து தேவைகளுக்கு பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2016 ஆண்டில் சுரேஷ் என்ற இளைஞரும்,  திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன முருகன் என்பவரும் சிறு நீரக கோளாரால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர். இருவரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் உப்பு உடலில் அதிகமாக இருந்ததே உயிர் இழந்ததற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே பன்னிர் செல்வம் என்ற இளைஞருக்கும் சிறு நீரக கோளாறு ஏற்பட்டு வாரத்திற்கு ஒரு முறை தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வருகிறார். வயதானவர்களுக்கு மட்டுமே வரும் இது போன்ற நோய்கள் பத்து வயது சிறுவர்களிடம் இருந்து தொடங்கி இளைஞர்களை மட்டுமே தாக்கி வருகிறது.

இந்த சோகம் ஒரு புறம் இருக்க கால்நடைகள் இந்த தண்ணீரை குடிக்க சென்று உயிர் இழந்துள்ள சம்பவங்கள் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த கிராம மக்கள் இராமநாதபுர மாவட்டத்தில் எத்தனை குடி நீர் நிறுவனங்கள் உள்ளது, அதில் எத்தனை நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது போன்ற கேள்விகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. அதில் 25 க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் நிறுவனம் இருப்பாதாகவும் அதில் எட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது என்ற தகவல் மாவட்ட மக்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.

அனைத்து பிரச்சனைக்கு காரணமான நிறுவனங்களை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாகவே நடந்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் மக்களை காவு வாங்கும் தனியார் தண்ணீர் நிறுவனங்களுக்கு தடை விதித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும் என்பதே இராமநாதபுர மாவட்ட மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

இது நம் பக்கத்துக்கு ஊரில் தான் நடக்கிறது என்று விட்டு விடாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்று  மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வரும் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்களை தகவல் அறியும் சட்டம் வாயிலாக அடையாளம் கண்டு நடவடிக்க எடுக்க கீழை மக்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கீழை நியூஸ் நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.