அமீரகத்தில் உள்ள துபை அரசாங்கத்தின் இஸ்லாமிய சமய மற்றும் அறநிலையத்துறை சார்பாக பன்முக கலாச்சார திருவிழா 27/07/2018 வெள்ளிக்கிழமை அன்று, துபை அல்குரைர் வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இத்திருவிழாவில், அரபி, சைனா, ஜெர்மன், ஃப்ரென்ச், ஸ்பானிஷ், ருமேனியா, ரஷ்யா, ஆப்ரிக்கா, தமிழ், மலையாளம், கன்னடம், உருது, பெங்காளி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மொழிப்பற்றாளர்கள் பங்கேற்று தத்தமது மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களை காட்சிப்படுத்தி இருந்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இக்கண்காட்சி இரவு 10 மணி வரை நடைபெற்றது.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக துபை அரசாங்கத்தின் இஸ்லாமிய சமய மற்றும் அறநிலையத்துறைச்சார்ந்த டாக்டர். அல் குபைசி, கலாச்சார துறை தலைவர் ருவையா கலந்து கொண்டு கண்காட்சியில் பங்குபெற்ற அனைத்து மொழி மற்றும் கலாச்சாரங்களைக் குறித்து கேட்டறிந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில், சிறந்த முதல் மூன்று மொழி மற்றும் கலாச்சார அமைவுகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ் முதலிடம் பெற்றது.
தமிழ் அரங்கத்தில், திருக்குறள், தமிழ் மொழி மற்றும் எழுத்துருக்களின் வரலாறு, தமிழ் வளர்ச்சி, தமிழர் நாகரிகம், தமிழ் கவிஞர்களின் பங்களிப்பு, சாதனைத் தமிழர்களின் வரிசை, தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள், தமிழர்களின் பாரம்பரிய-கலாச்சார பொருட்கள், தமிழ் நூல்கள் உள்ளிட்டவை காட்சிப் படுத்தப்பட்டிருந்தமை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு தமிழ் மற்றும் தமிழர் பற்றிய தொன்மை வரலாறு விளக்கிக் கூறப்பட்டது.
மேலும், கண்காட்சியின் இரண்டாவது பரிசு எத்தியோப்பிய மொழி அரங்கத்திற்கும், மூன்றாவது பரிசு பெங்காளி மொழி அரங்கத்திற்கும் வழங்கப்பட்டது.
தமிழ் அரங்கத்தின் அமைப்பு ஏற்பாடுகளை திரு. முஹைதீன் அப்துல் காதர், திரு. ரஃபீக், திரு. வலசை ஃபைஸல், ஃபக்ருதீன் அஹமது மற்றும் நண்பர்கள் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த பன்மொழித் திருவிழாவில் ஏராளமான மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று பயனடைந்தனர்.
தகவல் தூது ஆன்லைன்…
You must be logged in to post a comment.