Home செய்திகள் இராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

by ஆசிரியர்

கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமல்ல என்றும் 377 சட்டப் பிரிவை ரத்து செய்தும் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் முற்போக்குவாதிகள் என்பவர்கள் மூலம் ஆதரவான கருத்துக்கள் எழுந்தாலும், கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 17.09.18 மாலை 4.30 மணியளவில் இராமநாதபுரம் அரசு பணிமனை அருகில் நடைபெற்றது.

இதற்கு இராமநாதபுரம்(தெற்கு) மாவட்டத் தலைவர் அய்யூப்கான் தலைமை தாங்கினார். மாநிலத் தணிக்கைகுழு உறுப்பினர் கோவை R.ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஓரினச் சேர்க்கையால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து விளக்கி பேசினார்.

ஆண் பெண் என்று இரு பாலினங்கள் சேர்வதுதான் இயற்கை மரபாகும். ஓரினச் சேர்க்கை என்பது இயற்கை மரபை மீறிய அநாகரீகமான அறுவறுக்கத்தக்க செயலாகும். ஓரினச் சேர்க்கை முறையால் எய்ட்ஸ் உள்ளிட்ட பல உயிர்கொல்லி நோய்கள் ஏற்படுகின்றன.

ஆண், பெண் திருமணம் மூலம் சந்ததிகள் ஏற்பட்டு மனித குலம் பெருகும். ஒரே பாலின சேர்க்கையால் எதிர்கால சந்ததிகளின் நிலை கேள்விக்குறியாகும். மனித இனமே அழிந்து போகும் நிலை ஏற்படும். மேற்கத்திய நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியதால் அங்கு ஒழுக்கக் கேடுகள் பெருகிவிட்டன. குடும்ப அமைப்பு சீரழிந்து சிதைந்து விட்டது.

நமது நாட்டிலும் ஓரினச் சேர்க்கையை அனுமதித்தால் ஒழுக்கக் கேடுகள் பெருகும். சமூக சீர்கேடுகள் அதிகரிக்கும்.  எனவே ஓரினச் சேர்க்கை முறை தடை செய்யப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் 377 சட்டப் பிரிவை ரத்து செய்ததை திரும்பப் பெற வேண்டும் என உரை நிகழ்த்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சாகுல்,மாவட்ட துணைத்தலைவர் பசீர்,மாவட்ட பொருளாளர் ரஹ்மான்அலி, மாவட்ட துணைச்செயலாளர்கள் தினாஜ்கான், ஆரிப்கான், ராஜ்முஹம்மது, நசுருதீன், வடக்கு மாவட்ட தலைவர் ரமீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் வடக்கு மாவட்ட செயலாளர் நெய்னா நன்றியுரை கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com