திருச்சியில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு : 20 ஆண்டுகள் சிறை என்ற தீர்ப்பை கேட்டதும், நீதிமன்ற வளாகத்திலேயே விபரீத முடிவெடுத்த 2 குற்றவாளிகள்..
20 ஆண்டு சிறை தண்டனை என்ற தீர்ப்பை கேட்டதும் சம்பந்தப்பட்ட இரு குற்றவாளிகளும் திருச்சி நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்ததனர். இதையடுத்து படுகாயமடைந்த அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பசுபதி (27), வரதராஜ் (29) மற்றும் திருப்பதி (29) என்ற மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் நேற்று தீர்ப்பளித்தார்.
அவர் அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி தீர்ப்பளித்து அதற்கான ஆவணங்கள் தயார் செய்து கொண்டிருந்த போது, குற்றவாளிகளான திருப்பதி மற்றும் பசுபதி ஆகிய இருவரும் நீதிமன்ற வளாக முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். அதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் இருவரும் தண்டனையை கேட்ட அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்றார்களா? அல்லது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக குதித்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.