Home செய்திகள் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா:  117 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி..

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா:  117 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.30 – இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி, 61-வது குருபூஜையையொட்டி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு தலைமை ஏற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

அவர் பேசியதாவது: அனைவரது அன்பை பெற்ற தலைவராக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திகழ்ந்தவர் ஆவார். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்டு 10 ஆண்டு சிறைச்சாலையில் இருந்த தலைவர். சுகபோகங்களை துறந்து மக்களோடு மக்களாக எளிமையாக வாழ்ந்தவர். அவர் மறைந்தாலும் அவர் பிறந்த நாளையும், அவர் இறந்த நாளையும் வணங்கும் நாளாக மக்கள் வழிபட்டு செல்கின்றனர். இத்தகைய தினத்தை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது 2007-ல் பசும்பொன்னில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கமுதியில் அரசு கல்லூரி அமைக்கப்பட்டு மதுரை, சென்னையில் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் புகழை பாதுகாக்கும் தலைவராக கலைஞர் இருந்து வந்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தியாகத்தை போற்றும் வண்ணம் அவரின் நினைவிடத்தில் முக்கிய பிரமுகர் வந்து செல்லும் பகுதியில் பொதுமக்கள் வழிபடும் வந்து செல்லும் பகுதியிலும் பாதுகாப்புடன் சென்று வரும் வகையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2 மணிமண்டபம் கட்ட  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார் இவ்வாறு அவர் பேசினார். வருவாய், பேரிடர் மேலாண் துறை மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 98 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா உள்பட 117 பயனாளிகளுக்கு ரூ.9.17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி ரத்தினசாமி, பரமக்குடி சார் ஆட்சியர் தி அப்தாப் ரசூல், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தமிழ்செல்வி, கமுதி வட்டாட்சியர் சேதுராமன், கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை, செயல் அலுவலர் இளவரசி, கமுதி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com