Home செய்திகள்உலக செய்திகள் தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டம் வேண்டும்; தென்காசி மாவட்ட சங்கத்தினர் வலியுறுத்தல்..

தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டம் வேண்டும்; தென்காசி மாவட்ட சங்கத்தினர் வலியுறுத்தல்..

by Abubakker Sithik

தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கருதி பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் தென்காசி மாவட்ட கிளை சார்பில் பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சு. இராசேந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர் எம்‌. முத்துசாமி, முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட பொருளாளர் கே.எஸ். கணேசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், மாநில துணைத் தலைவர் நாகர்கோவில் நிக்சன், தென்சென்னை மாவட்ட தலைவர் லெட்சுமணன், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்ந்து கதைகள், கட்டுரைகள், மற்றும் பல்வேறு புத்தங்கள் எழுதிய தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க உறுப்பினரும், ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியருமான தென்காசி கு. அருணாசலம் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் அவரது திருவுருவப் படத்திற்கு மாநிலத்தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் மலர்மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு வழங்குகிற அனைத்து சலுகைகளையும் தாலுகா அளவில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு துவங்கி உள்ள பத்திரிகையாளர் நல வாரியத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 60 வயது நிரம்பிய அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தமிழக அரசு ஓய்வூதியமாக ரூபாய் 20 ஆயிரம் வழங்கிட வேண்டும். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி நியூஸ் 7 தொலைக் காட்சி நிருபர் நேச பிரபு மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதோடு, நேசபிரபு மீது  கொலைவெறி தாக்குதல் நடத்திய வன்முறை கும்பலை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் பகுதியில் பத்திரிகையாளர் நேச பிரபு ஏற்கனவே காவல்துறையிடம் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறிய காவல்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆங்காங்கே தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இயற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் கே.எஸ்.கணேசன், சு. இராசேந்திரன், எம். முத்துசாமி, சிவகிரி  வீரய்யா, நவநீதன், பெரியாண்டவர், ஈஸ்வரன், சொக்கம்பட்டி ரஹீம், கடையநல்லூர் அலெக்ஸ், தமிழ் முருகேசன், ராஜன், மாரியப்பன் திருமலை ராம்குமார், பாலாஜி, முருகன், பாலசுப்பிரமணியன் குமரேசன், குத்தால பெருமாள், ராஜா, சுப்பிரமணியன், ரூபன் ராஜ், ஜெய் கணேஷ், குருபரன், ராமராஜ், சரவணன்,உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி மாவட்ட நியூஸ் 7 தொலைக் காட்சி செய்தியாளர் டி.கே. ராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!