சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு ஐ.நா சபை பாராட்டு சான்று; பொதுமக்கள் பாராட்டு..
சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்களின் சுற்றுச்சூழல் சேவையை பாராட்டி ஐ.நா. சபையின் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் பால அருணாசலபுரம் சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேசிய பசுமை படையுடன் இணைந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி, தென்காசி மாவட்ட சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஸ்ரீ பவானி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, கடையநல்லூர் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் நெகிழி இல்லா கடையநல்லூரை உருவாக்க உறுதி கொண்டு தேவையான விழிப்புணர்வு பணிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், கடையநல்லூர் காவல் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகள், வனத்துறை அலுவலகம், ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு மாணவர்கள் சென்று அரசு அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் நெகிழியின் பயன்பாட்டால் மண், காற்று, நீர் ஆகியவை மாசு படுவதையும், அதனால் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடர் நிகழ்வு நடைபெற்றது. விழிப்புணர்வு மட்டுமல்ல தங்களுடைய வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். பள்ளி சார்பாக காய்கறி மார்கெட் சென்று வாழ்கை கல்வியை வழங்கும் நோக்கில் அனைத்து மாணவர்களும் 100 ரூபாய்க்கு காய்கறி வாங்கும் நிகழ்வில், அனைத்து மாணவர்களும் துணிப்பையுடன் சென்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர். சமூகத்திற்கும் முன்னுதாரணமாக செயல்படுகின்றனர்.
மாணவர்களின் செயல்பாடுகளை பாராட்டும் விதமாக ஐ.நா சபை, இந்திய அரசு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, சுற்றுச்சூழல் கல்வித்துறை இணைந்து சாதனா வித்யாலயாவின் பசுமை படையின் 53 மாணவர்களுக்கும், 12 ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. ஐநா சபை விருது பெற்ற மாணவர்களையும், ஆசிரியர்களையும் பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி, தமிழ்நாடு அரசு மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறுப்பாளர் ஸ்ரீ பவானி, தாளாளர் ரமேஷ், முதல்வர் மயில் கண்ணு ரமேஷ், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.