பாஜகவில் இருந்து கொண்டு எனது வெற்றிக்காக மறைமுகமாக பாடுபடுகிறார் அண்ணாமலை; கடையநல்லூரில் சீமான் பேச்சு..
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், போட்டியிடும் வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடையநல்லூரில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது சீமான் பேசியதாவது, ஒரு காலம் வரும், நேர்மை என்பது உள்ளங்கையில் நெருப்புத் துண்டை வைப்பதற்கு சமமாக இருக்கும் என்கிறார் நபிகள் நாயகம். அந்த காலம் இந்த காலம் தான் என் அன்பு மக்களே. பணம் இருப்பவர்கள் தான் அரசியலுக்கு வரமுடியும், அதிகாரத்திற்கு செல்ல முடியும் என்கிற நிலை இருக்கும் வரைக்கும் ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கான சேவை என்பது கனவாகத்தான் இருக்கும். கேடுகட்ட பணநாயகமாக மாறி இருக்கிற இந்த நாட்டில் ஒரு தூய ஜனநாயகத்தை மலரச் செய்வதற்கான ஒரு புரட்சியாகத்தான் உங்கள் பிள்ளைகள் இந்த அரசியலை முன்னெடுக்கிறோம்.
ஜாதி மதம் கடந்த சமுத்திரம் நாங்கள். மனிதம் என்ற உயர்ந்த கோட்பாட்டை கொண்ட பிள்ளைகள் நாங்கள். உங்கள் வாக்குகளை ஒலிவாங்கி (மைக்) சின்னத்திற்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள். நான் வைத்திருந்த விவசாயி சின்னத்தை எடுத்துக் கொண்டு என்னை வீழ்த்தி விடலாம் என கனவு கண்ட இந்த ஆட்சியாளர்கள். குறிப்பாக பாஜகவை சேர்ந்த என் தம்பி அண்ணாமலை. பாஜகவில் இருந்து கொண்டு மறைமுகமாக என் வெற்றிக்காக பாடுபடும் அவரை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
என்ஐஏ ரெய்டு மூலம் என்னை உலக அளவிற்கு உயர்த்தி சென்றவர் அவர். நான் வைத்திருந்த விவசாயி சின்னத்தை எடுத்து ஒலிவாங்கி (மைக்) சின்னத்தை கொடுத்து பாஜகவின் பீ டீம் நான் இல்லை என்பதை நிரூபித்த பெருந்தகை. அவருக்கு எனது அன்பையும், நன்றியையும் உரித்தாக்க கடமைபட்டுள்ளேன். என்னை மிகப்பெரிய தலைவனாக்க பாஜகவிலிருந்து போராடி கொண்டிருக்கிறார். எங்களின் இலக்கு இனத்தின் விடுதலை ஒன்றுதான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் என் அன்பு தம்பி மதிவாணன் அவர்களுக்கு ஒலி வாங்கி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என பரப்புரையில் சீமான் குறிப்பிட்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.