Home செய்திகள்உலக செய்திகள் சிவகிரி வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; தென்காசி கலெக்டர் தகவல்..

சிவகிரி வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; தென்காசி கலெக்டர் தகவல்..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் தமிழ்நாடு அரசின் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்ட முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்ட முகாம் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் 31-01-2024 காலை 9.00 மணி முதல் 01.02.2024 காலை 9.00 மணி வரை ஆகிய இரண்டு தினங்கள் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஏதாவது ஒரு வட்டத்தினை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்), இணை இயக்குநர் (வேளாண்மை), இணை இயக்குநர் (கால்நடை பாரமரிப்பு), இணை இயக்குநர் (நலப்பணிகள்), துணை இயக்குநர் (பொது சுகாதாரம்), கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலைகள்), நிர்வாக பொறியாளர் (நீர்வள ஆதார துறை), மண்டல இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்), உதவி இயக்குநர் (கிராம பஞ்சாயத்து), முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் இதர உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேற்காணும் அலுவலர்கள் 31.01.2024 அன்று முற்பகலில் சிவகிரி வட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று அரசால் நிறைவேற்றப்பட்டு வரும் முக்கியமான திட்டங்கள், பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்திடவும், சிவகிரி வட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையங்கள், பள்ளிகள், மதிய உணவு மையங்கள், அனாதை இல்லங்கள், பெண்கள் விடுதிகள் மற்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.

பின்னர் பிற்பகல் 2.30 மணிமுதல் 4.30 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவரால் நடத்தப்படும் ஆய்வு கூட்டத்தில் அனைத்து அலுவலர்களும், தங்களது களப்பணி தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்கப்பட உள்ளனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிற்பகல் 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவகிரி தேவர் மகாசபை திருமண மண்டபத்தில் வைத்து பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தும், கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அதனை கேட்டு நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும்.

அதனை தொடர்ந்து மாலை 6.00 மணி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்டத்தில் உள்ள முதுநிலை அலுவலர்களுடன் நகர்ப்புறம் மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு சென்று தெருவிளக்குகள், முறையாக எரிவதை கண்டறிந்தும், அரசு விடுதிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், அறிவுசார் மையங்கள், அனாதை விடுதிகள், சமூக நலத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதியோர் இல்லங்கள், பேருந்து நிலையங்கள், சமுதாயம் மற்றும் பொது கழிப்பிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து மேற்படி வசதிகள் முறையாக செயல்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்த பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட அனைத்து அலுவலர்களும் சிவகிரி வட்டத்திலேயே இரவு தங்க உள்ளனர்.

பின்னர் மறுநாள் (01-02-2024) காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை சிவகிரி வட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு சென்று குடிநீர் விநியோகம், பராமரிப்பு பணி, சுத்தம் மற்றும் சுகாதார பணி, பொது மற்றும் சமுதாய கழிப்பிடங்கள், பால் விநியோகம், பொது போக்குவரத்து, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் பல திட்டப்பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.

எனவே சிவகிரி வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களிடம் தங்களது பகுதிக்கு தேவைப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றையும், தங்களது பகுதியில் உள்ள குறைகளையும் நேரில் தெரிவித்து அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!