கை நிறைய பணம் இருந்தும் தெருவில் நிற்கும் பொது மக்கள்…
கீழக்கரையில் பொது மக்கள் அவதி..
அவசரத் தேவைகளையும் நிறைவேற்ற முடியாத அவசர நிலை..
கீழக்கரையில் எந்த திசை திரும்பினாலும் மக்கள் கையில் இருக்கும் 1000, 500 நோட்டுகளை மாற்ற அலைமோதி திண்டாடும் காட்சிகள் மன வேதனை தரக்கூடியதாக இருக்கிறது. கீழக்கரையில் உள்ள சில அரசு அலுவலகங்களாகிய நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியம் தவிர அனைத்து இடங்களிலும் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற பலகைகள் காணப்படுகிறது. இன்று காலை தபால் நிலையங்களில் புதிய நோட்டுக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் அங்கு குவியத் தொடங்கினர் ஆனால் 11 மணி வரை எந்த முன்னேற்றமும் இல்லாததால் பொதுமக்கள் கலைந்து பிற வங்கிகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள தானியங்கி இயந்திரத்ததை தவிர வேறு எந்த வங்கியிலும் தானியங்கி இயந்திரங்கள் செயல்படாமல் பொதுமக்கள் சொல்ல இயலாத துயரங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.
நேற்று மக்களின் துயரங்களை போக்கும் எண்ணத்தில் கீழக்கரை மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பாக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிக்கு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் முறைப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது, அதன் அடிப்படையில் இன்று காலை முதல் ஆண்கள் மற்றும் பெணகள் என தனி தனியாக கவுண்டர்கள் தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் டோக்கன் முறை செயல்படுத்தப்படாததால் இன்னும் மக்கள் வரிகை நீண்டு கொண்டே செல்கிறது.
இப்பொழுது ஏற்பட்டு இருக்கும் சில்லரை நோட்டுக்கள் மற்றும் புதிய நோட்டுக்கள் பற்றாகுறையால் பொது மக்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சிறு வியாபாரிகள் தங்கள் அன்றாட வியாபாரங்கள் பாதிக்கப்பட்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். மேலும் நோய்பட்டு இருக்கும் பொது மக்கள் சிகிச்சைக்கு சென்றாலும் புதிய நோட்களும், சிறிய தொகைகளும் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் உயிரை பணயம் வைத்தவர்களாக காணப்படுகிறார்கள். அரசு அதிகாரிகளும், நிறுவனங்களும் போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்ககைகள் எடுக்க வேண்டும் என்பதே மக்களின் இப்போதைய தலையாய கோரிக்கையாக இருக்கிறது.
அரசு அதிகாரிகள் கருணை காட்டுவார்களா?? பொதுமக்களுக்கு விடிவு காலம் பிறக்குமா??
You must be logged in to post a comment.