மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (11/02/2019) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணி அளவில் 32 வயது உள்ள இளம்பெண் தனது மகள், மகனுடன் அங்கு வந்தார். மனுவை கொடுப்பதற்காக நின்றிருந்த அந்த பெண் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து தன் மீதும், தனது குழந்தைகள் மீதும் ஊற்றினார். பின்பு தீக்குச்சியை எடுத்து பற்றவைக்க முயன்றார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனே விரைந்து செயல்பட்டு அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் வந்து அந்த பெண்ணையும், சிறுமி, சிறுவனையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (வயது32) என தெரியவந்தது. இவரது கணவர் அருள்முருகன் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு முத்துதர்ஷினி (10), கருப்பசாமி (3) என்ற குழந்தைகள் உள்ளனர்.
கணவர் இறந்தவுடன் பஞ்சவர்ணம் தனது தந்தை இருளப்பன் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். விவசாய கூலி வேலை பார்த்து குழந்தைகளை வளர்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சகோதரர்கள் துன்புறுத்தி தன்னை வீட்டில் இருந்து விரட்டி விட்டனர்.
இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் போலீஸார் எடுக்கவில்லை என்பதால் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க பஞ்சவர்ணம் முயற்சி செய்துள்ளார்.
போலீஸார் இது குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.