எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 18 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும் ஒரு படகோட்டிக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து மீண்டும் மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த பிப்.,8ம் தேதி எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இவர்கள் இன்று(பிப்.,22) இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.அப்போது 19 மீனவர்களில் 18 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒருவருக்கு மட்டும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட 18 மீனவர்களும் இந்திய துணைத் தூதராக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிறை தண்டனை விதித்த படகு ஓட்டுநரை மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிபதி கஜநிதிபாலன் ஒரு படகின் ஓட்டுனரான ஜான்சன் என்பவருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், எஞ்சிய 18 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், மற்றொறு படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதால் அந்த ஒரு படகை அரசுடமையாக்கி தீர்பளித்த சம்பவமானது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே மூன்று மீனவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறை தண்டனையை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து ஆறாம் நாளாக வேலை நிறுத்த போராட்டத்தை செய்து வருகின்றனர். அது மட்டும் இன்றி புகழ்பெற்ற வருடாந்திர திருவிழாவான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ள நிலையில், மீண்டும் ஒரு மீனவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ள சம்பவம், ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மீனவர்களிடையே கடும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
55
You must be logged in to post a comment.