மதிக்க வேண்டிய பெண்கள் – சிறப்புக் கவிதைக் கட்டுரை..

சிறப்புக் கவிதை-கட்டுரை..

சிந்திக்க சில நிமிடம்…

அதை செயல்படுத்த சில நொடி…

இணைய தளங்களில் ராட்சஷிகளாகவும் அடங்கா பிடாரிகளாகவும் கற்பனை செய்யப்பட்ட ஒரு உறவு தான் மனைவி எனும் உன்னதமான ஒரு உறவு…

இந்த உறவை இந்த இரண்டு குணங்களை கொண்டு மட்டுமே பார்வையிடும் நீங்கள் அவளது மற்ற குணங்களை குறித்து சிந்தித்ததுண்டா….

இவ்வாறு நீங்கள் சிந்திக்காமலும் அவளை அடங்காப்பிடாரி என்று அடிக்கடி சுட்டி காட்டியுமே அவளை உண்மையில் பிடாரிகளாக்கி விட்டீர்கள்..

ஆம்..

உண்மை இது தான்…

கொஞ்சம் யோசித்து பாருங்களேன்..

திருமணமான நாள் முதல் உங்களுக்காக வாழ ஆரம்பித்தவள் அல்லவா அவள்…

உங்களுக்கு, தான் எவ்வாறு இருந்தால் பிடிக்குமென்று கண்டறிந்து தன்னை அணு அணுவாய் மாற்றி கொண்டாளே…

தனக்கென வாழ்வதை மறந்து உங்களுக்கென தன் வாழ்க்கையை மாற்றி அதை ரசித்து மகிழ்வடைந்தாள் அவள்…

சேர்ந்து அமர்ந்து உணவுண்ண வேண்டுமென்று தன் பசி பாராமல் தங்களுக்கென்று காத்து காத்து கிடந்தவள் உங்கள் அன்பு மனைவி…

சபையில் உங்கள் பெயர் தாழ்த்தி பேசப்படும் போது என் கணவன் கண்ணியவான் என்று உங்கள் பெயரை ஓங்க செய்தவள் அவள்…

இரவெல்லாம் தன் தூக்கம் தொலைத்து நள்ளிரவு ஒரு மணியானாலும் உங்கள் வருகைக்காக அன்போடு காத்திருந்தவள் அல்லவா அவள்..

தன் கணவனே தன் எஜமான் என்றெண்ணி அந்நிய உறவுகளின் உரையாடலை நெருங்க கூட அஞ்சினாளே…

தன் நண்பர் கூட்டத்தோடு அவள் இருந்தாலும் தன் கணவன் வீடு வரும் நேரமென்று தோழிகளின் உரையாடலை முறித்து கொண்டு ஓடி வருபவள் அவள்…

ஆனால் நீங்கள் திருமணமான நாள் முதல் அவளுக்காகவே உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்தீர்களா…

அல்லது உங்கள் மனைவிகளுக்காக உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு விஷயத்தையாவது மாற்றியது தான் உண்டா…

அவளுக்கு பிடித்தவாறு உங்கள் வாழ்வில் நீங்கள் அமைத்த விஷயங்களை விரல் விட்டாவது உங்களால் எண்ணிட முடியுமா…

தனக்காக காத்திருக்கும் மனைவியின் பசி எண்ணி என்றாவது விரைந்து நீங்கள் வீட்டிற்கு வந்ததுண்டா…

தனது நண்பர்களுடன் இருக்கும் போது உங்களுக்கென காத்திருக்கும் உங்கள் மனைவியின் நினைவு ஒரு நாளும் உங்களுக்கு வந்துவிடுவதில்லையே..

உங்களின் கண்ணியத்தை சபையில் பேணுகின்ற உங்கள் மனைவியை அவள் செய்த சிறிய தவறுக்காகவும் அல்லது அவள் செய்யாத தவறுக்காகவும் சபையில் கண்டித்து அவளை இழிவுக்கு உள்ளாக்குகிறீர்கள்…

உங்கள் குடும்பத்தாருடன் இணைந்து அவளை கேலிப் பொருளாக்குகிறீர்கள்…

இவற்றோடு பல விஷயங்களை எண்ணி பார்க்கும் போது உண்மையில் நீங்கள் அவர்களுக்காக செய்திருக்கும் தியாகங்களை விட அவர்கள் உங்களுக்காக செய்திருக்கும் தியாகங்களே நிச்சயம் அதிகம்…

உண்மையில் அவள் உங்களை நம்பி தன் வாழ்வயே உங்களிடம் ஒப்படைத்த ஒரு உயிர்…

அந்த உயிரை எப்படியெல்லாம் நீங்கள் கவனித்து கொள்ள வேண்டும்…

அவள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் சிறிய சிறிய மாற்றங்கள் தான்…

அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் நீங்கள் ஏமாற்றங்களாக அவளுக்கு கொடுக்கின்ற அந்த மோசமான நாட்கள் தான் நாட்கள் செல்ல செல்ல அவளை அடங்கா பிடாரிகளாக மாற்றி விடுகின்றது…

இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் மனைவிகளை ராட்சஷி என்று சித்தரிக்கும் நீங்கள் அதற்கு காரணம் நீங்களே என்று புரிந்து கொண்டீர்களா…

உங்கள் மனைவிகளிடம் அன்பை மட்டும் விதைத்து அவளிடமிருந்து அன்பை எதிர்பாருங்கள்..

ஆனால் அதுவல்லாமல் உங்கள் மனைவிகளை உணவு சமைத்து கொடுக்கின்ற இயந்திரங்களாக ஒரு காலமும் நினைத்து விடாதீர்கள்…

சில நிமிடங்கள் ஆழமாக சிந்தியுங்கள்…

சில நொடிகளில் உங்கள் வாழ்க்கையை அன்பானதாக மாற்றி அமைதிடுங்கள்…

உங்கள் மனைவியரிடத்தில் நீங்கள் சிறந்த பெயர் பெற்றாலே மனிதர்களிலேயே நீங்கள் தான் சிறந்தவர் என்ற அந்தஸ்தை அடைந்து விடுவீர்கள்…

இறைவன் நாடினால்…

✍ – உம்மு அஃப்ஸான்