Home செய்திகள் பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவேந்தல்: செப்.11ல் போக்குவரத்து மாற்றம் – எஸ்பி உத்தரவு..

பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவேந்தல்: செப்.11ல் போக்குவரத்து மாற்றம் – எஸ்பி உத்தரவு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் 11.9.2023 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் அஞ்சலி செலுத்த வருவோரின் பாதுகாப்பு, நலன் கருதி அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கடைபிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்த வருவோர் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், சரக்கு வாகனம், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை,
மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வரும் தலைவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். பிற மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த மாவட்டங்களில் உரிய அனுமதி பெற்று வர வேண்டும்.சொந்த வாகனங்களில் செல்வோர் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடம் வந்து செல்ல வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. வாகனங்களின் மேற்கூரையில்  கண்டிப்பாக பயணம் செய்யக்கூடாது. திறந்த நிலையில் உள்ள வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது. வரும் வழித்தடங்களில் பட்டாசு வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காவல்துறையினரால் வரையறுக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்றுவரவேண்டும். எக்காரணம் கொண்டும் தடைசெய்யப்பட்ட வழித்தடங்களில் செல்லக்கூடாது. வாகனங்களில் வரும்போது கோஷம் எழுப்பாமலும், பிரச்னைகளை தூண்டும்
வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட பேனர் பயன்படுத்தக்கூடாது. வாகனங்களில் வரும்பொழுது வரும் வழியில் போக்குவரத்து இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தக்கூடாது.ஒலிபெருக்கி வைத்தல், வெடி போடுதல், சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல், ஜோதி ஓட்டம், முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல் அனுமதி இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ப்ளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 161 வழித்தடங்கள் தடை செய்யப்பட்ட வழித்தடங்களாக அறியப்பட்டுள்ளன. அவ்வழித்தடங்களில் அஞ்சலி செலுத்த வருவோரின் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. 137 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாவும் அறியப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 42 காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டள்ளன. பரமக்குடி நகரில் பாதுகாப்பு பணியை கண்காணிக்கவும், விதிகளை மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் 115 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பரமக்குடி நகர் முழுவதும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாண்டு பாதுகாப்பு பணிக்கு என திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, 22 செக்டார்களாகப் பிரிக்கப்பட்டு 25 காவல் கண்காணிப்பாளர்கள், 31 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 71 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 124 காவல் ஆய்வாளர்கள், 372 சார்பு ஆய்வாளர்கள், 3 844 காவல் ஆளிநர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 720 காவலர்கள், 340 போக்குவரத்துக் காவலர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 38 காவல் ஆய்வாளர்கள், 248 சார்பு ஆய்வாளர்கள், 972 தாலுகா காவல் ஆளிநர்கள் மற்றும் 291 இராமநாதபுரம் ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் உட்பட 6,526 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 35 வழித்தடங்களில் 4 சக்கர வாகனங்களிலும், 57 வழித்தடங்களில் இரு சக்கர வாகனங்களிலும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடஉள்ளனர்.
மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் சார்ஆட்சியர், கோட்டாட்சியர் பதவியில் 5 நிர்வாகத்துறை நடுவர்கள், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் பதவியில் 56 நிர்வாகத்துறை நடுவர்கள், வருவாய்த்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்னர். மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு அரசு, தனியார் பேருந்துகள் பரமக்குடி நகர் பகுதிக்குள் நுழைய அனுமதியில்லை. ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு, தனியார் பயணிகள் பேருந்துகளை ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆர்.எஎஸ்.மங்கலம், திருவாடானை, சருகனி, காளையார்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மாற்றுப்பாதையில் மதுரைக்கு இயக்க வேண்டும் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரும் அரசு, தனியார் பேருந்துகள் இதே மார்க்கத்தில் இயக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடிக்கு அனுமதியின்றி வரும் 4 சக்கரம், இரண்டு சக்கர வாகனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். உத்தரவு படி பொதுமக்கள், சமுதாய அமைப்பினர் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை கேட்டு கொண்டுள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com