Home செய்திகள் அரசு உதவிபெறும் சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் பள்ளிகளில்ஊதியம் பெறாத நிலையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியத்திற்கான அரசாணையை உடனடியாக வெளியிடுக!-தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்..

அரசு உதவிபெறும் சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் பள்ளிகளில்ஊதியம் பெறாத நிலையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியத்திற்கான அரசாணையை உடனடியாக வெளியிடுக!-தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்..

by Askar

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் செயல்பட்டுவரும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் பள்ளிகளில் பணிபுரியும் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள், கடந்த ஏழு ஆண்டுகளாக ஊதியம் பெறாத நிலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும், போராட்டங்கள் நடத்தியும் அவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கி ஊதியத்திற்கான அரசாணையை வழங்காமல் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் இழுத்தடித்து வருகின்றது. இதனால் அப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

கடந்த 17/9/2019 அன்று, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள் உட்பட உபரியாக உள்ள முதுகலைப் பட்டதாரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களைத் தேவையான பள்ளிகளுக்கு பணிநிரவல் (Recruitment) செய்யும் பணி முடியும் வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கூடாது என்று தமிழக அரசு அரசாணையைப் பிறப்பித்தது. 2019 ஏப்ரல் முதல் முன் தேதியிட்டு அதனை அமல்படுத்த ஆணையிடப்பட்டது.

மேற்கூறிய அரசாணையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட மேல்முறையீடு வழக்கில், மேற்கண்ட அரசாணையை ரத்து செய்தும் பணிநிரவல் தொடர்பாக சில விதிமுறைகளை வகுத்தும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 31/03/2021 அன்று உத்தரவிட்டு, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் இல்லை என ஆணையிட்டது. அரசாணை வெளியிடுவதற்கு முன் அதாவது 17/9/2019க்கு முன் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் உள்ள காலியான ஆசிரியர் பணியிடங்களைத் தகுதியான ஆசிரியர்களை கொண்டு நிரப்பி சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஒப்புதல் வேண்டி கருத்துரு (opinion) அனுப்பப்பட்டன.

மேற்கூறிய அரசாணையை சுட்டிக் காட்டி இந்தக் கருத்துரு (opinion) சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் 29 /3/ 2023 தேதியிட்ட சுற்றறிக்கையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 17/9/2019 க்கு முன்பு காலியான முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி அனுப்பப்பட்ட கருத்துருக்கு (opinion) ஒப்புதல் வழங்குமாறு ஆணையிட்டது. ஆனால், பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தமட்டில் தனியாக ஆணை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டாகியும் இதுவரையில் அது பற்றிய எந்த ஒரு ஆணையும் வெளியிடப்படவில்லை.

இதனால் 17.09.2019 க்கு முன் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி அனுப்பப்பட்ட கருத்துருக்கு (opinion) ஒப்புதல் வழங்குவது தொடர்பான ஆணைகள் இன்னும் வெளியிடப்படாத காரணத்தால், கடந்த ஏழு ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியம் பெறாத நிலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ஒரு பள்ளியில் ஒரே தேதியில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் முதுகலை ஆசிரியருக்கு பணி ஒப்புதலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததால் ஊதியம் இல்லாமல் பணி செய்யும் நிலையும் உள்ளது.

இந்தக் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாத நிலையில், பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இப்படி தங்கள் ஊதியத்திற்கான அரசாணைக்காகத் தொடர்ந்து போராடி வரும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, அரசு உதவிபெறும் சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தமிழக அரசு உடனடியாக இக்கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!