Home செய்திகள் உரிமை, நம்பிக்கை, இரண்டில் எது புனிதமான..!

உரிமை, நம்பிக்கை, இரண்டில் எது புனிதமான..!

by Askar

புனிதம் என்பது மதவுணர்வு சார்ந்த சொல் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அந்தச் சொல்லையே இப்போது நான் பயன்படுத்த விரும்புகிறேன் – உரிமை, நம்பிக்கை இரண்டில் எது புனிதமானது என்றால் உரிமைதான்.

மதம் தன்னை மாற்றிக்கொண்டதே இல்லையா? மதக்கோட்பாட்டின்படி பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட காலம் கடந்துவிடவில்லையா? பெண்கள் வெளியே போகக்கூடாது, வேலைக்குப் போகக்கூடாது என்றெல்லாம் இருந்த சமய விதிகள் மாறவில்லையா? கணவனின் பிணத்தோடு மனைவியையும் உயிரோடு கொளுத்தி உடன்கட்டை ஏற்றிய பழக்கம் கைவிடப்படவில்லையா?

கேரளத்தில் சிரியன் கத்தோலிக்க தேவாலயம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பினராயி விஜயன் அரசாங்கம் செயல்படுத்த மறுத்ததாகவும், அது வாக்கு வங்கி அரசியல் என்றும் பாஜக-வினரும் பாஜக ஆதரவு நடுநிலையாளர்களும் (!) குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அந்த மலங்கரா தேவாலய வழக்கு கிறிஸ்துவ மக்களின் நம்பிக்கை தொடர்பானதோ, வழிபாட்டு உரிமை தொடர்பானதோ அல்ல. தேவாலய நிர்வாக அதிகாரம் யாருக்கு உரியது என்ற வழக்கு அது. அதில் பின்னர் காவல்துறை துணையோடு நீதிமன்ற ஆணைப்படி உரிய பிரிவினரிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அதையும் இதையும் ஒப்பிடுவதுதான் வாக்கு வங்கி அரசியல்.

முந்தைய தீர்ப்பு குறித்து விரிவாகக் கொண்டு சென்றிருக்க வேண்டும், மக்கள் ஆதரவோடு செயல்படுத்தியிருக்க வேண்டும் என்ற கருத்து ஏற்கத்தக்கதுதான். ஆனால் பினராயி அரசு அந்தத் தீர்ப்பு வந்ததும் பெண்களெல்லாம் கோவிலுக்கு வாருங்கள் என்று தானாக அழைப்பு விடுக்கவில்லை. நீதிமன்றத் தீர்ப்பே கூட பெண்கள் அந்தக் கோவிலுக்குப் போக வேண்டும் என்பதல்ல. அவ்வாறு போக விரும்புகிற பெண்களுக்கு அந்த வாய்ப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே தீர்ப்பு. அதைத்தான் பினராயி அரசாங்கம் செய்தது.

கம்யூனிஸ்ட்டுகள் அந்தப் பெண்களின உரிமைக்காக நிற்பதை வாக்கு அரசியல் என்கிறார்கள். அதுதான் நோக்கம் என்றால், பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிற உணர்வுக்கு சாதகமாக நடந்துகொள்வதுதானே அரசியல் ஆதாயமாக மாறும்? அதற்கு மாறுபட்ட நிலைப்பாடு எப்படி வாக்குகளை அள்ளித்தரும்? ஆகவே இது கொள்கை அரசியல்தானேயன்றி வாக்கு வாக்கு அரசியல் அல்ல.

10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்குத் தடை என்பதே பிற்காலத்தில் பிறப்பிக்கப்பட்டதுதான். மாதவிடாய் நிகழ்கிற பெண்கள் என்பதால் கோவில் தீட்டுப்பட்டுவிடும் என்று காரணம் சொல்லப்படுகிறது. ஒரு வாதத் தெளிவுக்காகக் கேட்கிறேன் – 14 வயது 15 வயது வரையில் கூட பூப்படையாத பெண்கள் உண்டு; 60 வயது வரையில் கூட மாதவிடாய் நிற்காத பெண்களும் உண்டு; வயதின் அடிப்படையில் அந்த 14 வயது வரையிலான பெண்களைத் தடுப்பது சரியா? அந்த 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அனுமதிப்பது தீட்டுப்படச் செய்யாதா?

மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிப்பது, பார்ஸிகளின் தீக்கோயிலில் பெண்களை அனுமதிப்பது, ஒரு பிரிவினரின் சடங்குப்படி பெண் குழந்தைகளின் பிறப்புறப்பைச் சிதைப்பதற்குத் தடை விதிப்பது… இப்படியான கோரிக்கைகளோடு ஏற்கெனவே வழக்குகள் நடந்துகொணடுதான் இருக்கின்றன. அந்த வழக்குகளை எல்லாம் ஒரே விரிந்த அமர்வு தன் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறபோது இறுதித் தீர்ப்புக்கு மிக அதிகமான கால தாமதமாகாதா? அந்தத் தாமதம் மக்கள் நல்லிணக்கத்தை வளர்க்க உதவுமா அல்லது அதற்கு எதிரான பகைமையை விசிறிவிட உதவுமா?

இறுதித் தீர்ப்பு எப்படி வரும் என்று சோதிடம் கணிப்பதற்கில்லை. ஆனால் எப்படி வரவேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தலாம். எந்த மதம் சார்ந்தவர்களானாலும் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுவதாக அந்த இறுதித் தீர்ப்பு வரவேண்டும்.

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com