Home செய்திகள் மேல்பெண்ணாத்தூர் பகுதியில் விஜயநகர காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.

மேல்பெண்ணாத்தூர் பகுதியில் விஜயநகர காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஏரிப்பகுதியில் பெரிய பாறை ஒன்றை அப்பகுதி மக்கள் “செல்லம்மா சாமி” என்று பெயரிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருவதாகவும், வறட்சி காலங்களில் மழை வேண்டி பூஜை கிடா வெட்டி பூஜை செய்வது வழக்கமாகி கொண்டிருந்தனர். நிலம் அந்தப் பாறையில் அரிய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இருந்ததாக கூறப்படுகிறது. கிராம மக்கள் அச்சத்தில் அதன் அருகில் செல்லாமல் இருந்தனர்.திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், பழனிச்சாமி, மதன்மோகன், ராஜகோபால், ஸ்ரீதர், தீபக், ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் செங்கம் தாலுகா மேல்பென்னாத்தூரில் பெரிய ஏரிக்கு அருகில் உள்ள பாறையில் ஆய்வு செய்தனர். அப்போது அதில் 14 வரியில் பராந்தகன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கிடைக்கப்பெற்றது. இது குறித்து அவர்கள் கூறியதாவது:-இக்கல்வெட்டு முதலாம் பராந்தக சோழனின் 20-வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. மணியக்கல்லைச் சேர்ந்த குணவரன் அம்பலவன் மாதேவன் என்பவர் மேல்வேணாட்டு புன்னாத்தூரில் ஏரி, கிணறு அமைத்து விளைநிலங்கள் உண்டாக்கியுள்ளார். இவற்றை வலிகண்டப் படையார் பாதுகாக்க வேண்டுமென்று கேட்டு ஏரிக்கு அப்படையின் பெயரை கொடுத்து வலிகண்டப்பேரேரி என்று பெயரிட்டு பெருமை படுத்தியுள்ளார். அந்த ஏரிப்பாசனத்தில் உள்ள பெரிய விளைச்சல் நிலத்தை தனது பெயரிட்டு குணவரன் மாதேவி என்று அழைத்திருக்கிறார். இக்கல்வெட்டின் முதல் 3 வரிகளின் வலதுப்புறம் சற்று சிதைந்துள்ளது. இருப்பினும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் மணியக்கல் என்பது தற்போதைய மணிக்கல் கிராமமாக இருக்கலாம். புன்னாத்தூர் என்பதே தற்போது மேல்பென்னாத்தூர் என்று மருவியாதாகவும் தெரியவருகிறது.மேலும் இவ்வூரின் காந்தி நகர் ஏரி என்ற இடத்திலும் கல்வெட்டு உள்ளது என கிடைத்த தகவலின் பேரில் அங்கும் சென்று ஆய்வு செய்யப்பட்டதில் ஏரிக்கரை ஓரம் உள்ள இரண்டு பெரிய பாறைகளில் 40 வரிகளில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கிடைக்கப்பெற்றது. இக்கல்வெட்டு விஜயநகர அரசர் அச்சுததேவமகாராயர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. இந்த இரு கல்வெட்டுகளிலும் ஏரி வெட்டுவித்தும், சீர் செய்தும் அதை தொடர்ந்து பாதுகாக்க நிலம் தானம் அளித்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் நீர் நிலைகளைப் பாதுகாக்க அக்காலத்து அரசர்கள், அதிகாரிகள் மேலாண்மை செய்ய எடுத்துக்கொண்ட சீரிய முயற்சிகளை பதிவு செய்யும் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகளாகும். இவற்றை அனைவரும் அறியும் வகையில் தொல்லியல் துறை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும் என்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!