
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா தொடங்க, 18 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பந்தக்கால் முகூர்த்தத்தோடு, தீபா திருவிழா பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், விழா நடக்குமா என்ற அச்சம் பக்தர்களிடையே எழுந்துள்ளது.திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும், 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும். 10ம் நாள் விழாவில், 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். ‘கொரோனா’ ஊரடங்குக்கு தளர்வால், கடந்த செப்., 1 முதல், பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பந்தக்கால் முகூர்த்தம் மட்டும் நடந்துள்ளது. வரும், 17ல், நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவத்துடன், விழா தொடங்க உள்ள நிலையில், பூர்வாங்க பணிகள் எதுவும் செய்யவில்லை. இதனால், தீப திருவிழா நடக்குமா என்ற அச்சம் பக்தர்களிடையே எழுந்துள்ளது. கடந்த, 28ல், கோவில் இணை ஆணையர் ஞானசேகர், அரசு அதிகாரிகளுடன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தீப விழா குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில், பெரும்பாலானோர், ‘கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். சமூக இடைவெளியுடன், விழாக்களை தடையின்றி நடத்த வேண்டும்’ என, வலியுறுத்தினர். இதை கேட்ட மாவட்ட ஆட்சியர் ‘இது குறித்து அறிக்கை, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றார். இது குறித்து, ஆன்மிகவாதிகள் கூறியதாவது: கொரோனாவை காரணம் காட்டி தீப திருவிழாவை நடத்துவதில், மெத்தனம் காட்டுவதாக தெரிகிறது. இந்த மாவட்டத்தை சேர்ந்த, அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், இதில் கவனம் செலுத்தி, விழா பாரம்பரியத்தை சிதைக்காமல், நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
You must be logged in to post a comment.