Home செய்திகள் இனிவரும் காலத்தில் நமது பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு எப்படி இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்; CMN சலீம் அறிவுரை..

இனிவரும் காலத்தில் நமது பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு எப்படி இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்; CMN சலீம் அறிவுரை..

by Askar

இனிவரும் காலத்தில் நமது பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு எப்படி இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்; CMN சலீம் அறிவுரை..

உலகத்தின் மொத்த செல்வத்தையும் வங்கிகள் தங்களது பிடியில் மூலதனமாக வைத்துக் கொண்டு மதிப்பில்லாத காகிதப் பணத்தை அடித்து வட்டிக்கு விடுவதுதான் இன்றைய முதலாளித்துவ பொருளாதார பரிவர்த்தனை.

வட்டித் தொழில் செய்யும் மரபுசார்ந்த வங்கிகளுக்கு மாற்றாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இஸ்லாமிய வங்கி என்ற ஒரு கருத்தை உருவாக்க வேண்டிய நெருக்கடி முஸ்லிம் அறிஞர்களுக்கு ஏற்பட்டது. அப்போது தொடங்கி இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் கடந்த 70 ஆண்டுகளாக நிதானமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.

இன்றைய நிலையில் உலகம் முழுவதும் 72 நாடுகளில் சுமார் 550 இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இயங்குகின்றன.

இன்றைய இஸ்லாமிய நிதிச் சந்தையின் சொத்து மதிப்பு 4 டிரில்லியன் டாலர்கள்.உலக செல்வத்தில் 1 சதவிகிதம். (இந்தியாவின் ஆண்டு பட்ஜெட் மதிப்பைக் காட்டிலும் 7 மடங்கு கூடுதல்) ஆண்டுக்கு 17 சதவிகித அளவில் வளர்ச்சியடைந்து 2026 இல் இஸ்லாமிய நிதித் துறையின் சந்தை மதிப்பு 6 டிரில்லியன் டாலர்களாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கற்பனைக்கு எட்டாத உயரத்திற்கு வளர்ச்சியடைந்து வரும் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மதிப்பு மிகுந்த பொறுப்புகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளில் நம் பிள்ளைகளை உருவாக்க வேண்டும்.

குறிப்பாக இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட மதரஸா மாணவர்களுக்கு இதுஒரு நம்பிக்கை மிகுந்த இலக்காக இருக்கும். ஆலிம் கல்வி முடித்த அரபி மற்றும் ஆங்கிலப் புலமையுடைய இளைஞர்கள் இஸ்லாமிய நிதித் துறையில் ஆராய்ச்சிக் கல்வியை (PhD) சர்வதேச பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்க வேண்டும்.

இதுபோன்று உயர்ந்த இலக்கை மிகத் துல்லியமாக குறிவைத்து பயணிப்பவர்கள் கூட்டாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவிகொண்டு பயணித்தால் தான் இலக்கை இலகுவாக எட்ட முடியும்.

அதேபோல அரசு உதவிபெறும் முஸ்லிம் கலை அறிவியல் கல்லூரிகளின் முன்னாள் மாணவர்களின் சங்கங்கள் 6 அரபு நாடுகளிலும் துடிப்புடன் இயங்குகின்றன.

தாங்கள் படித்த கல்லூரிகளில் வணிகம் பொருளாதாரம் பயிலும் மாணவர்களுக்கு இப்படி ஒரு தொலைநோக்கு இலக்கை நிர்ணயித்து இந்த அமைப்புகள் பயிற்சியளித்தால், இந்த ஒரு வேலையை மட்டும் தொய்வில்லாமல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு செய்தால் அரபு நாடுகளின் அனைத்து இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அதிகமானோர் தமிழக முஸ்லிம் பிள்ளைகளாக இருப்பார்கள்.

உள்நாடு வெளிநாடுகளில் எந்தந்த திட்டங்களுக்கு எவ்வளவு கடனுதவியளிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவெடுக்கும் இடத்தில் இடைவெளி விடாமல் நம் பிள்ளைகள் அமர வேண்டும். தமிழகத்தின் மிக முக்கியமான திட்டங்களுக்கு கடனுதவியளிக்க முடியும்.

அரபுநாடுகளில் உள்நாட்டு மக்களை வேலையில் அமர்த்தும் சட்டங்கள் என்னதான் வந்தாலும் அறிவுக்கும் திறமைக்கும் உயர்ந்த அணுகுமுறைக்கும் இந்த உலகில் எல்லைகடந்த ஒரு ஈர்ப்பும் மதிப்பும் எப்போதும் இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

மட்டுமல்லாமல் அரபுநாடுகளில் மக்கள் தொகை வெகுவேகமாக குறைந்து வருகிறது. செல்வமும் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை சுமார் 80 டாலர் முன்பின் இருப்பதும், சவுதியில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள பிரமாண்டமான தங்கச் சுரங்கம் ஆண்டுக்கு 8 ஆயிரம் கிலோ தங்கத்தை வெளியே தள்ளப் போவதும் சேர்ந்து இனி அடுத்த 50 – 100 ஆண்டுகளுக்கு வளைகுடா நாடுகள் பொருளாதார வல்லமை மிக்கதாக நீடிக்கப் போகின்றன என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

இந்த பொருளாதார வளர்ச்சிகளையும் வாய்ப்புகளையும் தொடர்ந்து கவனித்து அதை நமது பிள்ளைகளுக்கு பயிற்சியளிக்கும் ஒரு அமைப்பை (R&D) உருவாக்கி செயல்படுத்தினால் உம்மத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சி பிரம்மாண்டமாக இருக்கும்.

வீட்டில் வளரும் உங்கள் பிள்ளைகளின் உள்ளங்களில் இந்த செய்திகளை அப்படியே காட்சிப்படுத்துங்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!