புதுமடத்தில் எஸ்டிபிஐ சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்டிபி ஐ கட்சி புதுமடம் கிளை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் 01.12.2018 ஆம் தேதி தொடங்கியது. 15 நாள் தொடர் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வந்தது. தொடர் பிரசாரத்தில் எஸ்டிபிஐ., கட்சி செயல்வீரர்கள் வீடுகள் தோறும் சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.  மக்கள் கூடும் இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். போதை பிரியர்களை சந்தித்து போதையில் இருந்து விட ஆலோசனை வழங்கினர். போதை ஒழிப்பு தெரு முனைக்கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர் பிரசாரத்தின் நிறைவு நாளாகிய இன்று (15.12. 2018) புதுமடம் நகர் முழுவதும் பேரணிகள், வீதி நாடக நிகழ்ச்சிகள், கருத்தரங்கு நடைபெற்றது.

நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு புதுமடம் கிளை தலைவர் எஸ்.ஆர்.ஜெ.சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். இராமநாதபுரம் நகர் தலைவர் ஐ.அஜ்மல் சரீப் வரவேற்றார். கிழக்கு மாவட்ட தலைவர் ஏ. அப்துல்வஹாப், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நியாஸ்கான் முன்னிலை வகித்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தமிழ் மாநில பொருளாளர் வழக்கறிஞர் முஹம்மது ஷாஜஹான் சிறப்புரையாற்றினார். போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை இராமநாதபுரம் கூடுதல் எஸ்.பி., முனைவர் எஸ். வெள்ளத்துரை துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் ஜெ.பெரியார் லெனின் ஆலோசனை வழங்கினார்.  இராமநாதபுரம் ஜாஸ் கேட்டரிங் இன்ஸ்டியூட் நிர்வாக இயக்குநர் முகமது சலாவுதீன் அறிவுறுத்தல் படி மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர். புதுமடம் கிளை செயலாளர் முஹம்மது யாசிர் நன்றி கூறினார். மாவட்ட செயலாளர் பி.ஏ.அப்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எஸ்டிபிஐ கட்சி நடத்திய 15 நாள் போதை விழிப்புணர்வு பிரசாரத்தால் மன மாற்றமடைந்த சிலர் போதை பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தமாட்டோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட செயலாளர் மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர் எம். ஹமீது இப்ராஹிம் தலைமையில் எஸ்டிபிஐ., நிர்வாகிகள் பிரசார ஏற்பாடுகளை செய்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..