Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் எம்.பி. மீது அவதூறு பரப்பி மக்களிடம் பிளவை ஏற்படுத்தும் பாஜக! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்…

இராமநாதபுரம் எம்.பி. மீது அவதூறு பரப்பி மக்களிடம் பிளவை ஏற்படுத்தும் பாஜக! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் எம்.பி. மீது அவதூறு பரப்பி மக்களிடம் பிளவை ஏற்படுத்தும் பாஜக கட்சியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த பெண்கள் உள்பட 11 பேர் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதற்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர் பல நியாயமான கேள்விகளை எழுப்பி, கருணையுடன் நடந்துகொள்ள வேண்டிய நேரத்தில் யாரை திருப்திபடுத்த அரசு இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என கேள்வி எழுப்பியிருந்தார்.

முன்னதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியும் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டித்திருந்தது. அதேபோல வெளிநாட்டைச் சேர்ந்த தப்லீக் ஜமாஅத் ஆர்வலர்களை கோவிட்-19 தனிமைப்படுத்தப்பட்ட காலம் கழிந்த பிறகும், அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்து வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம் மனிதாபிமானமற்றது மற்றும் அறநெறிகளுக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி அவர்களின் அறிக்கையை மதவாத கண்ணோட்டத்தில் சித்தரித்து பாஜக மாநில துணைத் தலைவர் குப்புராம் என்பவர் அவதூறு பரப்பியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டவர்களை கருணையுடன் அணுக வேண்டிய நேரத்தில், அதனை மதவாதமாக சித்தரித்து, மக்களிடம் பிளவை ஏற்படுத்துவது என்பது பாசிச திட்டத்தின் ஒரு பகுதி. எல்லா மக்களுக்கும் பொதுவானவராக ஒரு எம்.பி. செயல்படும்போது அதனை மதவாத கண்ணோட்டத்துடன் அணுகுவதும், மக்களிடம் பிளவை ஏற்படுத்துவதும் கண்டிக்கத்தக்கது.

இராமநாதபுரத்தில் எப்படியாவது கால்பதிக்க வேண்டும் என்று பாசிச சக்திகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அதற்கு இந்த கொரோனாவை வாய்ப்பாக பயன்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இதுபோன்ற மக்களை பிளவுப்படுத்தும் பாசிச அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகிவிடாமல் மக்கள் அதனை புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

தொடர் அவதூறு மூலம் கொரோனாவை கொண்டு மக்களிடம் தேவையற்ற வதந்திகளை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பாஜகவை சேர்ந்த குப்புராம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!