Home கட்டுரைகள் அறிவியல் கண்ணோட்டமா,அப்படியென்றால்?

அறிவியல் கண்ணோட்டமா,அப்படியென்றால்?

by Askar

“அறிவியல் கண்ணோட்டம் தேவை,” என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். அறிவியல் துறை சார்ந்தவர்கள் மட்டுமல்ல. அரசியல் தலைவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், தொழில் முனைவோர், தொழிலாளர் சங்கத்தினர்… என சமுதாயத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்குவோரும் இக்கருத்தை முன்வைப்பார்கள். ஐ.நா. சபையின் மனித உரிமை, கல்வி வளர்ச்சி, மொழிகள் பாதுகாப்பு உள்ளிட்ட அமைப்புகள் அறிவியல் கண்ணோட்டத்தை வலியுறுத்துகின்றன. இந்தியாவின் அரசமைப்பு சாசனம் அறிவியல் மனநிலையை ஒரு சமுதாயக் கடமையாக வளர்க்க அறிவுறுத்துகிறது.

புயலாகவோ பூகம்பமாகவோ வருகிற இயற்கைப் பேரிடர்கள், மணல் கொள்ளையாகவோ காடுகள் அழிப்பாகவோ கொண்டுவரப்படுகிற செயற்கைப் பேரிடர்கள் தொடர்பான உரையாடல்களில் இக்கருத்து முன்வைக்கப்படும். வறட்சியை சமாளிப்பதற்கான நீர் மேலாண்மை, காற்றைக் காப்பதற்கான சுற்றுச்சூழல் அக்கறை பற்றிய ஆராய்ச்சிகளில் இதே கருத்து பரிந்துரைக்கப்படும். தமிழக மக்கள் மனங்களை உருக்கிய சிறுவன் சுர்ஜித் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான விவாதங்களிலும் அறிவியல் மனப்பான்மை வழிமொழியப்பட்டது.

வாழ்க்கையில் நாம் எப்போதுமே அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகிறோம். இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வதாகட்டும், நோய்களிலிருந்து மீள்வதாகட்டும், போக்குவரத்துத் தேவைகளாகட்டும், வீட்டு வசதிகளாகட்டும் எல்லாவற்றிலும் தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கையாளுகிறோம். பாரம்பரிய விவசாயத்தில் புதிய முறைகளை அறிமுகப்படுத்துகிறோம், தொழில்துறையில் நவீன எந்திரங்கள் வந்துகொண்டே இருப்பதைப் பார்க்கிறோம். கல்விக்கூடங்களில் கணினி வழியாகக் கற்பிக்கிறோம். பேசிக்கொள்வதற்காக வந்த கைப்பேசிகள் இன்று என்னென்னவோ வழிகளில் பயனளிப்பதை அனுபவிக்கிறோம். அறிவியல் கண்டுபிடிப்புகளால் வந்த இத்தகைய கருவிகளை எவ்வாறு இயக்குவது என்ற அறிவுதானே அறிவியல் கண்ணோட்டம் என்று மேலோட்டமாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

அது வேறு, இது வேறு.!

அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கையாளுவது வேறு, அறிவியல் கண்ணோட்டத்தைக் கடைப்பிடிப்பது வேறு. அறிவியல் தொழில்நுட்பம் என்பது பயன்பாடு, அறிவியல் கண்ணோட்டம் என்பது அணுகுமுறை.

அவதிப்படுகிறபோது மாத்திரை விழுங்கினால் சரியாகிவிடும் என்று பரிந்துரைப்பது மருத்துவ அறிவியல் கண்டுபிடிப்பு சார்ந்த அறிவு. சிறிது நேரம் காற்றோட்டமாக இருந்தால் போதும் தானே சரியாகிவிடும் என்று அறிவுறுத்துவது அறிவியல் கண்ணோட்டம் சார்ந்த புரிதல். தலைவலியின் தன்மையைப் பொறுத்து மருந்து எடுத்துக்கொள்வதுதான் தீர்வு என்ற புரிதலுக்கு வருவதும் அறிவியல் கண்ணோட்டமே.

“நோய்நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”

-என்று திருக்குறள் காட்டுவது அறிவியல் பாதைதான். உடலில், மனதில், உறவில், தொழிலில், படிப்பில், குடும்பத்தில், சமூகத்தில், அரசியலில் என்று எங்கும் எதிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத்தான் நோய் என்கிறார் வள்ளுவர். முதலில் பிரச்சினையைப் புரிந்துகொள்வது, பின்னர் அதற்கான காரணத்தைக் கண்டறிவது, அதன் பின் அதைத் தீர்ப்பதற்கான வழியை முடிவு செய்வது, இறுதியில் அந்த வழியைச் செயல்படுத்துவது – இவ்வளவுதான் அறிவியல் கண்ணோட்டம்.

ஊடுருவியது பாம்புகள் அல்ல!

சுற்றுச்சூழல் பாதிப்புகளாலும் காடுகள் ஆக்கிரமிப்பாலும் விலங்குகளுக்கு ஏற்படுகிற நெருக்கடி ஒரு நோய்தான். வேறு வழியின்றி அவைகள் ஊருக்குள் வருமானால் அதை “யானைகள் அட்டகாசம்” “பாம்புகள் ஊடுருவல்” என்கிறோம். உண்மையில் யானைகளுக்கும் பாம்புகளுக்கும் உரிய இடங்களில் மனிதர்கள்தான் புகுந்து அட்டகாசம் செய்கிறோம். இதைப் புரிந்துகொண்டு இயற்கைப் பாதுகாப்புக்காகக் குரல் கொடுப்பதும் அறிவியல் கண்ணோட்டம்தான்.

ஒரு சிக்கலின் மூலத்தை அறிந்து அதைக் களைய முற்படாமல் தவறான புரிதலோடு கையாண்டால் சிக்கல் அப்போதைக்குத் தீர்ந்துவிட்டது போலத் தோன்றும், ஆனால் பல மடங்கு தீவிரமாக மறுபடியும் முளைத்துவிடும். அவரவர் வீடுகளில் செய்கிற சொதப்பல்கள் முதல் அரசாங்க நடவடிக்கைகளில் சறுக்கல்கள் வரையில் எத்தனை சிக்கல்கள் இப்படித் தீவிரமாகியிருக்கின்றன!

பணிபுரியும் இடங்களில் குறிப்பிட்ட வேலை தொடர்பாகவோ, உடன் பணியாற்றுவோர் தொடர்பாகவோ பிரச்சினை ஏற்படுமானால், சிலர் வெற்றிகரமாகத் தலையிட்டுத் தீர்வு காண்பார்கள். அவர்களிடம் அறிவியல் கண்ணோட்டம் இருக்கிறது என்று பொருள். எவ்வளவு பெரிய துயரம் நிகழ்ந்தாலும் சிலர் கலங்கிவிடாமல் சமாளித்து நிற்பார்கள், மற்றவர்களையும் வேதனையிலிருந்து விடுவிப்பார்கள். அவர்களிடம் இருப்பதும் வாழ்க்கை அனுபவத்திலிருந்து வளர்த்துக்கொண்ட அறிவியல் கண்ணோட்டமேயாகும். அறிவியல் மனநிலை கொண்டவர்கள் தாய்மொழி வழி கல்வியை ஆதரிக்கிறவர்களாக, குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்ப்பவர்களாக, பெண்ணுரிமையை மதிப்பவர்களாக இருப்பார்கள்.

புதுமைகளை அனுபவிக்க முடியாதவர்கள்
இப்படியெல்லாம் ஆராய்ந்து சிரமப்படுவதை விட ஏற்கெனவே சொல்லப்பட்டு வந்திருக்கிற வழிகளை அப்படியப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதே பாதுகாப்பானது என்று கருதுகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களால் ஒருபோதும் புதுமைகளை உருவாக்கவோ அனுபவிக்கவோ முடியாது.

“அறிவியல் உண்மை என்று சொல்லப்படுவதெல்லாம் நிலையானவையாக இல்லையே! நேற்று ஒன்றைச் சொல்கிறார்கள், இன்று ஒன்றைச் சொல்கிறார்களே…” என்று சிலர் வாதிடுவதுண்டு. ஆனால் அறிவியலின் சுவையான வளர்ச்சியே இதிலேதான் இருக்கிறது. கேள்விகள் கேட்பதும், பதில்களை மறுபடியும் கேள்விக்கு உட்படுத்துவதுமே அறிவியல் பயணம். முடிவே இல்லாமல் புதிது புதிதாய்க் கண்டுபிடிப்பது தொடரும் என்பதால் அறிவியல் பயணம் தேங்குவதும் இல்லை, முடங்குவதும் இல்லை.

அஸ்ட்ரானமியும் அஸ்ட்ராலஜியும்.!

அறிவியல் பயணம் எப்படித் தொடங்கியது? ஆதி மனிதர்கள் உணவு தேடியும், பனியுகம் போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து பாதுகாப்பான இடம் நாடியும் கண்டம் விட்டுக் கண்டம் புலம் பெயர்ந்தபோது, புல்வெளிகளில் மல்லாக்கப் படுத்து வானத்தைக் கவனித்தார்கள். பளிச்செனத் தெரிந்த நட்சத்திரங்களை இணைத்துக் கற்பனையாகக் கோடுகள் வரைந்தார்கள். நட்சத்திர நிலைகள் மாறுவதை உற்று நோக்கினார்கள். அவ்வாறு மாறுவதற்கும் பூமியில் பருவநிலைகள் மாறி மாறி வருவதற்கும் தொடர்பு இருப்பதை உள்வாங்கினார்கள். சக மனிதர்களோடு அந்த அறிவைப் பகிர்ந்தார்கள். இப்படித்தான் வான் அறிவியல் (அஸ்ட்ரானமி) பரிணமித்தது.

ஆனால், நட்சத்திர நிலைகளும் கோள்களின் நிலைகளும் மாறுவதோடு தனி மனிதர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நினைத்தவர்கள், அதை வைத்து ஒருவரது வாழ்க்கையில் நிகழக்கூடியதைக் கணிக்க முடியும் என்றார்கள். இப்படியாக ஜாதக ஜோதிடம் (அஸ்ட்ராலஜி) உருவாக்கப்பட்டது. முன்னது கேள்வி ஞானத்தை வளர்த்தது. பின்னது கேள்விச் சுதந்திரத்தை முடக்கியது.

பால் குடிக்கும் சிலைகள்.?

கேள்விச் சுதந்திரம் முடக்கப்படுகிறவர்களில் முக்கியமானவர்கள் குழந்தைகள்தான். மூத்தவர்கள் சொல்லிச் சென்றிருப்பதை அப்படியே நம்ப வேண்டும், அதுதான் நல்லொழுக்க அடையாளம் என்றே போதிக்கப்படுகிறது. ஆனால் எதையும் நம்ப மறுக்கும் உரிமை குழந்தைக்கு உண்டு. பிள்ளையார் சிலை பால் குடிக்கிறது என்று கிளப்பிவிடப்படுகிறபோது, அதை நம்புகிறவர்கள் பக்திப் பரவசத்தோடும் பால் செம்புகளோடும் கோவில்களுக்குப் படையெடுப்பார்கள். நம்ப மறுக்கும் உரிமையுள்ள குழந்தைகள், உற்று நோக்குவார்கள். வேறு சிலைகளும் பால் குடிப்பதைக் கண்டுபிடிப்பார்கள். அறிவியலில் அதற்குப் பெயர் பரப்பு இழுவிசை என்று எடுத்துச் சொல்வார்கள். ஒரு தேவாலய வாசலில் ஊன்றப்பட்ட சிலுவை கண்ணீர் வடிக்கிறது என்று கிளப்பிவிடப்படுகிறபோது, உணர்ச்சி வசப்பட்டு ஜெபம் செய்துகொண்டிருக்காமல், அது தரையடி நீரோட்ட அழுத்தத்தின் விளைவு என்று விளக்குவார்கள்.
“அறிவியலில் இறுதியான விளைவு என்ன என்பதை விட, அதை நோக்கிச் செல்கிற வழிமுறைகள் மிக முக்கியமானவை,” என்கிறார் இந்திய தேசிய அறிவியல் கல்வியகத்தின் முன்னாள் தலைவரான பரிணாம உயிரியல் பேராசிரியர் ராகவேந்திரா கடாக்கர். “ஆதாரம், பகுத்தறிவு, வாத நியாயம் என்ற அடிப்படைகளில் முடிவுக்கு வருவதே அறிவியல் மனநிலை. வெறும் நம்பிக்கைகள் அல்லது மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் அல்ல,” என்றும் அவர் கூறுகிறார்.

“அப்படியானால் கடவுளை நம்ப மறுப்பதுதான் அறிவியல் கண்ணோட்டமா” என்று கேட்கலாம். உலகில் உள்ள அறிவியலாளர்களில் 70 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே என்று தெரிவிக்கிறது ஒரு ஆய்வு. ஆனால் தங்களது நம்பிக்கைகளையும் ஆராய்ச்சிகளையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாத அறிவியலாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கத்தான் செய்கிறார்கள்.

அது மட்டுமேயல்ல.!

அறிவியல் கண்ணோட்டத்துடனான கேள்விகள் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. வரலாறு என்று சொல்லப்படுவது, சாதிப் பெருமை என்று கட்டிவிடப்படுவது, பொருளாதார சீர்திருத்தம் என்று புகுத்தப்படுவது, அரசியல் வலிமை என்று கதைக்கப்படுவது உள்பட எல்லாவற்றையுமே கேள்விக்கு உட்படுத்துவதும் பதில்களைக் கண்டுபிடிப்பதும் அறிவியல் கண்ணோட்டமே.

ஏழை-பணக்காரர், ஒடுக்கப்பட்ட குலம்-உயர்த்திக்கொண்ட குலம், கல்வி மறுப்பு-கல்வி வாய்ப்பு, அடிமைப்படுத்தப்படும் பெண்-ஆதிக்கம் செலுத்தும் ஆண் என்பனவாகிய பாகுபாடுகள் சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரும் தடைக்கற்கள் என்று புரிந்துகொண்டு அவற்றைப் புரட்டிப்போடும் மானுட இயக்கங்களோடு இணைந்து நிற்பது உன்னதமான அறிவியல் கண்ணோட்டம்.

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com