அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த, அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர், ஜாக் மா பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1964).

ஜாக் மா (Jack Ma)  செப்டம்பர் 10, 1964ல் சீனாவில் சிஜியாங் மாநிலத்தில் அங்சூவில் பிறந்தார். இளம் அகவையிலேயே ஆங்கிலம் கற்க மிகுந்த ஆர்வம் காட்டிய மா அடுத்திருந்த தங்குவிடுதியிலிருந்த வெளிநாட்டவருடன் உரையாட 45 நிமிடங்கள் மிதிவண்டியில் செல்வார். கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாக தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார். பின்னர் அங்சூ ஆசிரியக் கல்லூரியில்(நார்மல் பல்கலைக்கழகம்) பயின்றார். 1988ல் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போதே மாணவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அங்சூ டியான்சி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு வணிக விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஜாக் மா கல்வியில் சிறந்த மாணவராக இருக்கவில்லை. ஒருமுறை சார்லி ரோஸ் என்பவர் எடுத்த பேட்டியின் போது, ஜாக் மா நான் ஆரம்ப பள்ளித் தேர்வில் 2 முறை தோல்வியடைந்தேன், நடுநிலைப் பள்ளித் தேர்வில் 3 முறை தோல்வியடைந்தேன், கல்லூரி நுழைவுத் தேர்வில்  2 முறை தோல்வியடைந்தேன் பிறகுதான் பட்டம் பெற்றேன்” என்று தெரிவித்தார்.

ஜாக் மா கல்வி கற்றலில் மிகுந்த போராட்டத்தை சந்தித்தார். குறிப்பாக இளமை காலத்தில் பள்ளிப் படிப்பில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தார். எனினும், அவர் தனக்கு தீவிர ஆர்வமிருக்கும் (passionate) விஷயங்களில்  சிறந்து விளங்கினார். உதாரணத்திற்கு ஆங்கிலத்தை கற்றுக்கொண்டிருந்தார். கல்லூரி நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 120 மதிப்பெண்ணுக்கு 1 மதிப்பெண் மட்டுமே எடுத்தவர். தேர்வில் தோல்வியடைவது என்பது ஒரு வகை, ஆனால் நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 1 சதவீதம் மட்டுமே எடுப்பது என்பது தோல்வியையைவிட வேறுவிதமான வீழ்ச்சி. அந்த நாட்களில் ஜாக் மா கணித பாடத்தில் (mathematics) மிகவும் போராடினார். நான் கணக்கில் சிறந்தவனல்ல, மேலாண்மை கற்றவனுமில்லை, இன்றும் என்னால் கணக்கியல் அறிக்கைகளை படிக்க இயலாது என்று ஒருமுறை கூறினார். பில்லியனர் (billionaire) ஆவதற்கு கணக்கில் சிறந்தவராக இருக்கவேண்டும் என்பதை மாற்றியவர்.

இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா (jack Ma) இளமைப்பருவத்தில் கணினி என்ன வார்த்தையை கூட கேட்காதவர். 1980 ஆண்டில் Hangzhou Normal பல்கலைக்கழகத்தில் பயின்று அவர் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். நான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 10 முறை விண்ணப்பித்தேன், விண்ணப்பித்த 10 முறையும் நிராகரிக்கப்பட்டேன். ஆனால் என்றாவது ஒரு நாள் நான் அங்கு மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பேன் என்று எனக்குள் கூறிக்கொள்வேன்”.   இந்த புறக்கணிப்புகள் ஒருபோதிலும் அவரை பின்னடையச் செய்ததில்லை. ஜாக் மா பட்டம் பெற்றப் பின் 30 வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்தார், விண்ணப்பித்த 30 வேலைக்கும் நிராகரிக்கப்பட்டார். அவர் ஒருமுறை போலீஸ் அதிகாரி வேலைக்கும் அணுகினார், “நீங்கள் சிறந்தவர் இல்லை (You’re no good) ” என்று காரணம் கூறப்பட்டு அதிலும் புறக்கணிக்கப்பட்டார்.

KFC-யில் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்த 24 பேரில் 23 பேர் தேர்தெடுக்கப்பட்டனர். ஒரே ஒருவர் மட்டுமே நிராகரிக்கப்பட்டார். அந்த ஒருவர்  ஜாக் மா ஆவார். அவர் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் உயரம் குறைவானவர் மற்றும் நல்ல தோற்றப் பொலிவு கொண்டிருக்காதவர் என்பதற்காக. இந்த புறக்கணிப்புகள் யாவும் அவரின் தன்னம்பிக்கையையும், உறுதியையும் ஒருபோதும் குறைத்ததில்லை. மா முதலில் தமது அமெரிக்க நண்பர்களின் உதவியுடன் சீன நிறுவனங்களுக்கு வலைத்தளங்கள் உருவாக்கலானார். 1995ல் மா சீன யெல்லோப்பேஜசு என்ற இணையதளத்தை நிறுவினார். இதுவே சீனாவின் முதல் இணையவழி நிறுவனமாக பரவலாக நம்பப்படுகிறது. 1998 முதல் 1999 வரை சீன பன்னாட்டு மின்னணுவியல் வணிக மையம் என்ற தகவல்தொழினுட்ப நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இது அரசுத்துறையில் வெளிநாட்டு வணிகம் மற்றும் பொருளியல் ஒத்துழைப்பு அமைச்சரகத்தின் கீழ் இயங்கியது.

1999ல் சொந்தமாக அலிபாபாவை நிறுவினார். சீனாவில் இயங்கிய வணிகரிடை சந்தைக்கடையான இது 240 நாடுகளிலும் ஆட்சிப்பகுதிகளிலும் இருந்த 79 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாக தற்போது வளர்ந்துள்ளது. செப்டம்பர் 2014ல் தனது பங்குகளை விற்பனை செய்து $20 பில்லியன் பணமெழுப்ப ஆரம்ப பொது விடுப்புகள் அறிக்கையை வெளியிட்டது. மா தற்போது அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராக உள்ளார். இக்குழுமத்தில் Alibaba.com, டாவோபாவோ சந்தையிடம், இட்டிமால், இடாவோ, அலிபாபா மேகக் கணிமை, யுகுசுவான், 1688.com, Aliexpress.com, அலிப்பே என்ற முதன்மையான ஒன்பது நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன.

நவம்பர் 2012ல் அலிபாபாவின் இணைய பரிவர்த்தனைகள் ஒரு டிரில்லியன் யுவானாக இருந்தது. இதனால் மா “டிரில்லியன் ஹூ” எனப்படுகிறார். சீனமொழியில் “டிரில்லியன் யுவான் மார்கிசு” எனப் பொருள்படும். ஜாக் மா சாங் யிங்கை மணந்துள்ளார்.இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். ஜாக் மா சீன தொழில் முனைவர் ஆவார். இவர் புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராவார். ஃபோர்ப்ஸ் இதழின் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்ற முதல் சீன நாட்டில் வாழும் சீனராவார்.

Source By: Wikipedia, Tamilentrepreneur.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

செய்தியாளர் வி காளமேகம்