சாலைப் பாதுகாப்பு வார விழா : மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார்..

பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. முப்பதாவது சாலை பாதுகாப்பு வார விழா இன்று முதல் 04.02. 2019 முதல் 10.02.2019 வரை கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடி நகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக இன்று சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு விழா நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் பலர் தங்கள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி பேரணியாக வந்தனர்

தூத்துக்குடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் இருந்து வந்த அவர்கள் குரூஸ் பர்னாந்து சிலை மற்றும் பாலவிநாயகர் கோயில் வழியாக தென்பாகம் காவல் நிலையம் வந்து முடித்தனர். இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார்,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா முன்னிலை வகித்தார்

சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளிடமும், பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களிடமும், தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ,கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடமும் மற்றும் அதில் அமர்ந்து செல்பவர்களிடமும் சீட் பெல்ட் அணிந்து செல்வது குறித்தும் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை முரளி ரம்பா வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு முகாமை தூத்துக்குடி நகர பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் மற்றும் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் முத்து, முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் சிவ. செந்தில்குமார் ,காவல்துறை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் சிசில், ஆயுதப்படை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் காவல்துறையினர் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.