குப்பை மேடாக உருவெடுக்கும் கீழக்கரை தெருக்கள்.. சமூக அமைப்புகளின் வேண்டுகோளுக்கு பிறகு குப்பைகள்அகற்றப்படும் அவல நிலை..

கீழக்கரையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான விடுமுறையை முன்னிட்டு பல இடங்களில் குப்பைகள் தேக்கமடைந்து துர்நாற்றங்கள் அதிகரித்தும் நோய்கள்பரவும் அபாயமும் உருவாகி வந்தது. அதிலும் முக்கியமாக வடக்குத் தெரு தொழுகைப் பள்ளிக்கு அருகில் குப்பைகள் குவிந்து அனைவரும் முகம் சுழிக்கும் நிலை உருவானது.

இது சம்பந்தமாக மக்கள் பொதுத்தளம் மற்றும் எஸ்.டி.பி.ஐ (SDPI) அமைப்பு சார்பாக நகராட்சிக்கு மனு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆணையர்(பொறுப்பு) சந்திரசேகர் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி வழிகாட்டுதலில் இன்று கீழக்கரையின் பலப் பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. இதற்கான முயற்சிகள் எடுத்த சமூக நல அமைப்பின் சார்பாக நகராட்சி அலுவலர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

கீழக்கரையில் ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் பல மக்கள்பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுக்கும்படலம் அன்றாடம் காட்சியாக உள்ள சூழ்நிலையில் இதுபோன்ற நகராட்சியின் கவனக்குறைவும், நகராட்சியால் செய்ய வேண்டிய அத்தியவாசிய பணி என்பதை நகராட்சி நிர்வாகம் மறந்து போய் இருப்பது மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கீழக்கரை நகராட்சியில் இதுபோன்ற பணிகள் தாமதம் அடைவதற்கு குறைவான பணியாளர்கள் இருப்பது ஒரு காரணமாக இருந்தாலும் சமீபத்தில் வார்டு வாரியாக நியமிக்கப்பட்ட துப்பரவு மேற்பார்வையாளர்கள் முறைப்படியான திட்டமிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளாததே, இது போன்ற கழிவுகள் அகற்றப்படாமல்  இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. வார்டு வாரியான மேற்பார்வையாளர்கள் கடந்த மாதங்களுக்கு முன்பு நகராட்சியால் அறிவித்து இருந்ததை நாம் ஏற்கனவே நம் இணையதளத்தில் பதிந்து இருந்தோம் மீண்டும் உங்கள் பார்வைக்கு:-

வார்டு 1 முதல் 7 வரை – திரு. மனோகரன் – 9443495460 வார்டு 8 முதல் 14 வரை – திரு. காஜா -9994046329 வார்டு 15 முதல் 21 வரை – திரு. சக்தி – 9840909198