
திருச்சி- ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று வருடங்களாக மிகவும் மந்தமான இந்நிலையில் (ஆர்.எஸ்.மங்கலம் – தேவிபட்டினம் இடையே) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ரோட்டின் குறுக்கே ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் தோண்டி பாலங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் குழியை சுற்றி எவ்வித காங்கிரீட் தடுப்புச் சுவர்களும் அமைக்கப்படவில்லை.
அபாய எச்சரிக்கை தகவல் பலகைகள் முறையாக தேவையான அளவு மக்கள் அறியும் வகையில் வைக்கப்படுவதில்லை. தேசிய நெடுஞ்சாலை என்பதால் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து மிகவும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்த ஷாஜஹான் என்பவரின் மகன் பஷீர் அஹமது அவர்கள் ராமநாதபுரத்திற்கு தொழில் சம்பந்தமாக பழங்கள் கொள்முதல் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் அதிகாலை 4 மணி அளவில் செல்லும் போது சோழந்தூர் அருகே பின்னால் வந்த கனரக வாகனம் சாலை விதிகளை மீறி தட்டிவிட்டதால் நெடுஞ்சாலையில் பாலம் அமைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த எந்த வித பாதுகாப்பு முறைகளையும் பின் பற்றாமல் தோண்டியிருந்த குழியில் விழுந்து விட்டார்.
அதிகாலை 4 மணிக்கு குழிக்குள் விழுந்த நபர் காலை 9 மணி அளவில் தான் மயக்கம் தெளிந்து எழுந்து தன்னுடைய தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து பின்னர் அவருடைய நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் மீட்கப்பட்டு ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாலை 4 மணிக்கு குழிக்குள் விழுந்தவரை காலை 9 மணி வரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயமாகும். அவர் விழுந்த இடத்தில் காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டு இருந்ததால் அவருடைய முதுகெலும்பு முறிந்துமைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதால். உடலின் கீழ் பகுதிகளை இயக்கும் நரம்புகள் துண்டாகி விட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு குறைந்தது 6 லட்சமாவது தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். விபத்துக்குள்ளான நபர் சிறிய பழக்கடை நடத்தி வருவதால் சிகிச்சைக்கான முழு தொகையும் அவரால் செலவழிக்க இயலாது. எனவே மாவட்ட நிர்வாகமும், சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரும் விபத்துக்குள்ளான நபரின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . மேலும் நெடுஞ்சாலையில் பள்ளங்கள் தோண்டி உள்ள இடங்களில் கான்கிரீட் தடுப்பு வேலி அமைத்திடவும், அது சம்பந்தமான முறையான எச்சரிக்கை பலகைகள் அமைத்திடவும் பொதுமக்கள் வலுவாக கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதல் மாவட்ட நிர்வாகமும், அரசும் தலையிட்டு முறையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பமாகும்
You must be logged in to post a comment.