இராமநாதபுரத்தில் பூட்டிய 2 வீடுகளில் மர்ம நபர்கள் கை வரிசை காட்டி 70 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஆத்மநாதசாமி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, இவர் சாயல்குடி அருகே மேலக்கிடாரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மேரி ஜெபரத்தினம். இவர் குத்துக்கல் வலசை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
நேற்று முன்தினம் இருவரும் பணிக்கு சென்று விட்டனர். அண்ணாதுரையின் தந்தை தேவபிரியன் வீட்டில் இருந்தார். அன்றைய மதியம் இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். மாலையில் திரும்பிய போது வீட்டின் முன்புறக் கதவு உடைக்கபப்ட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு உள்ளே இருந்த 50 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. அண்ணாதுரை புகாரில் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
அதே போல் இன்னொரு சம்பவத்தில் இராமநாதபுரம் அருகே காரிக் கூட்டம் ராணி, அஜ்மல்கான் ஆகியோரது வீடுகள் கடந்த சில நாட்களாக பூட்டி கிடந்தது. இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரண்டு வீடுகளிலும் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தனர்.. ராணி வீட்டு பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.10 மதிப்புள்ள வெள்ளி காசுகளை கொள்ளையடித்துச் சென்றனர். அஜ்மல் கான் வீட்டில் எதுவும் சிக்காததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தாங்கள் வந்து சென்ற தடயங்களை போலீசார் கண்டுபிடித்து விடாமல் இருக்க கண்காணிப்பு கேமராவையும் பிடுங்கிச் சென்றனர். புகார்படி கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.