ஆபத்தான நிலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

அரியலூர் மாவட்டம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பங்குழி கிராமத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகளவில் செல்கின்றன.

இதனால் வேப்பங்குழி ரயில்வே கேட்டில் இருந்து பூண்டி பிரிவு ரோடு வரை சுமார் 200 மீட்டர் தார் சாலையின் இரு ஓரங்களிலும் அதிக அளவில் சேதம் அடைந்து இரண்டிலிருந்து மூன்று அடி வரை பள்ளம் பல இடங்களில் காணப்படுகிறது.

அந்த பள்ளங்களால் அந்த சாலையில் விபத்து அடிக்கடி நடந்து கொண்டே இருக்கிறது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி சுமார் ஒரு வருடகாலமாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் இடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர்.

இந்த நிலை நீடித்தால் இன்னும் பல விபத்துக்கள் இந்த சாலையில் நடைபெற வாய்ப்பாக அமையும். ஆகவே கூடிய விரைவில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இனியும் சீரமைக்க வில்லையெனில் வேப்பங்குழி ரயில்வே கேட் அருகே மிகப்பெரிய சாலை மறியலில் ஈடுபடுவோம் என ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

பல உயிர்களை கருத்தில் கொண்டு சாலையை சீரமைக்குமா தேசிய நெடுஞ்சாலைத்துறை?

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்