Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் நடைபாதையை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.

தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் நடைபாதையை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம், ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் ஊரக  வளர்ச்சி முகமை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து மேற்கொண்ட கொரோனா வைரஸ் தடுப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் நடைபாதையை மாவட்ட  ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழக முதல்வரின் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ்  பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்  ஒரு பகுதியாக ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் நடைபாதை  அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த பாதையின் வழியாக பயணிக்கும் பொழுது கிருமிநாசினி தானாக தெளிக்கப்படுகிறது

இதனால் எந்தவொரு நோய் தொற்றும் பரவாமல் தடுக்க முடிகிறது. இது போன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் நடைபாதையை மேலும் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற அமைப்பு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய அரசு  மருத்துவமனை போன்ற பொது இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4,777 நபர்கள் திரும்பியுள்ளனர். அவர்களில்  தற்போது 1,789 நபர்கள் அவரவர் குடும்பத்தாருடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மற்ற அனைவருக்கும் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்து கொரோனா அறிகுறி ஏதும் இல்லாமல்  நலமுடன் உள்ளனர். அதேபோன்று, கீழக்கரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்த நிகழ்வில் கலந்து கொண்ட  151 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி  அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணியானது  தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுசுகாதாரத்துறை மூலமாக 215 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு  அந்தப்பகுதியில் உள்ள 11,000-க்கு மேற்பட்ட வீடுகள் முழுவதும் சுகாதாரத் துறையின் முழு கட்டுப்பாட்டுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  அதேபோன்று பரமக்குடி பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 நபர்களின் இருப்பிடங்களைச் சுற்றி 5  கி.மீ. சுற்றளவிற்கு உட்பட்ட பகுதிகள் சுகாதாரத் துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு  வரப்பட்டு 417 பொது சுகாதாரத் துறை பணியாளர்கள் மூலம் 35 ஆயிரம் வீடுகளில் 14 நாட்கள் தொடர்ந்து மருத்துவ  சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட  நிர்வாகம் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை பின்பற்றி இந்த  நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கீழக்கரையில் சுகாதாரத் துறை முழு கட்டுப்பாட்டுடன் முறையில் வீடு வீடாக  சென்று கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிட்டார். இராமேஸ்வரத்தில் நியாய விலைக்கடையில் குடும்ப  அட்டைதாரர்களுக்கு கொரோனா உதவித்தொகை ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை பார்வையிட்டார். செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் வெளியிடப்பட்ட கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இராமேஸ்வரம்  நகராட்சி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள் 130 பேருக்கு  அம்மா உணவகம் மூலம் தயாரித்த உணவை வழங்கினார். இராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, நகராட்சி ஆணையாளர்கள்  என்.விஸ்வநாதன் (இராமநாதபுரம்), ராமர் (இராமேஸ்வரம்), அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.அல்லி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பி.வெங்கடாசலம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அஜித் பிரபு குமார், இராமேஸ்வரம் வட்டாட்சியர் அப்துல் ஜபார் உட்பட அரசு அலுவலர்கள் பலர்  உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!