10ம் வகுப்பு பரிட்சை எழுதிய மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா??… பள்ளி தாளாளர் ஆதங்கம்..

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வி தாள்கள் அனைத்தும் கடினமாக இருந்ததால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் தமிழகம் முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் மன வேதனையுடன் பரிதவித்து வருகிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அரசாங்கமோ தேர்தல் களத்தில் தீவிரமாக உள்ளது, கல்வித்துறை அதிகாரிகளோ வாய் திறக்க மறுக்கின்றனர்.

10 ஆம் வகுப்பு பாடத்தை வைத்து, அதே வகுப்பு ஆசிரியர்களை கொண்டு கேள்வி தாள்கள் தயாரிக்காமல் ஐஐடி ஆசிரியர்களை கொண்டு கேள்வி தாள் தயாரித்து இருப்பார்களோ என்ற ஐயம் எழுகிறது.

1 முதல் 9 வகுப்பு வரை எளிதாக தேர்ச்சியடையும் வகையில் தேர்வு முறை பின்பற்றப்படும்போது, திடீரென அந்த இளம் மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு கடினமாக்குவதன் நோக்கம் புரியவில்லை.

மாணவர்களின் எதிர்கால நலம் கருதி 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் கருணை மதிப்பெண் வழங்க பள்ளி நிர்வாகிகள் மற்றும் சங்கங்கள் அனைத்தும் அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.

அதே சமயம் மாணவர்கள் யாரும் மதிப்பெண் குறைந்து விடுவோம் என்ற மனவேதனை படாமல் மதிப்பெண்களை வைத்து நம் வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்து தன்னம்பிக்கையுடன், இது போன்ற எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் இறைவன் துணையுடன் சந்திப்போம் என்ற மன உறுதியுடன் வாழ்ந்து சாதனை படைக்கவேண்டும் என  MMK முகைதீன் இப்ராகிம், தாளாளர், கீழக்கரை,  இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் தெரிவித்துள்ளார்.