Home செய்திகள் மழை வெள்ளத்தால் உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை.

மழை வெள்ளத்தால் உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை.

by mohan

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியில் உள்ள யாதவர் தெரு, சேடக்குடி தெருக்களில் வசிக்கும் மக்கள் கறவை மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த மாதம் ஏற்பட்ட பெருமழையால் இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் நிரம்பியது. கண்மாயிலிருந்து வெளியேறிய வெள்ளநீரால் முத்தாலை ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் யாதவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. அந்தப் பகுதி முழுவதும் 3 நாட்களுக்கு மேலாக வெள்ளநீர் தேங்கி நின்றதால், தண்ணீரில் நின்ற மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதில் 11 மாடுகள் இறந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கடுமையான நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மாடுகளை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் மக்கள் இதனால் பெரும் வேதனையடைந்தனர். எனவே உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், நோய் தொற்று ஏற்பட்டுள்ள மாடுகளை குணப்படுத்துவதற்கு உரிய கால்நடை மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கோவிந்தன் தலைமையில், வத்திராயிருப்பு தாசில்தார் முத்துமாரியிடம், நோய் தொற்றால் உயிரிழந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com