Home செய்திகள் அழிந்த கிராமத்தின் அழியாத வரலாறு கோடாங்கி சொன்ன குறியால் மனம் மகிழ்ந்த சேதுபதி மன்னர்

அழிந்த கிராமத்தின் அழியாத வரலாறு கோடாங்கி சொன்ன குறியால் மனம் மகிழ்ந்த சேதுபதி மன்னர்

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கருங்கலக்குறிச்சி அருகில் தற்போது பேச்சில்லா கிராமமாக உள்ள எருமைப்பட்டியைச் சேர்ந்த ஒரு கோடாங்கி சொன்ன குறியால் மனம் மகிழ்ந்த சேதுபதி மன்னர், அவருக்கு சிலை அமைத்து சிறப்பு செய்துள்ளார்.அழிந்துபோன எருமைப்பட்டியின் அழியாத வரலாறு பற்றி கருங்கலக்குறிச்சியைச் சேர்ந்த முதுகலை தமிழாசிரியர் உ.சண்முகநாதன் கூறியதாவது,மதுரை அழகர் கோவிலிலிருந்து ஒரு தம்பட்டம் மாட்டை (கோவில் மாடு) ஓட்டிக்கொண்டு ஊர் ஊராகப் பயணம் செய்து வந்த ஒரு முதியவர், ஒவ்வொரு வீட்டின் முன்பும் அழகர்மலை கோவிந்தனின் பெருமையைச் சொல்லி அருள்வாக்கும் கூறி வந்தார். பல ஊர்கள் பயணம் செய்த அவர் ஒருநாள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகிலுள்ள எருமைப்பட்டிக்கு வந்து அருள்வாக்கு கூறினார்.ஒரு பிரம்பை தரையில் ஊன்றி அதில் மாட்டின் கயிற்றை கட்டியிருந்தார். இரவு அவ்வூரில் தங்கியிருந்தவர் காலையில் வேறு ஊருக்குப் புறப்படும் நோக்கில், தரையில் ஊன்றிய பிரம்பை பிடுங்க முயல, முடியவில்லை. இறைவனை வேண்டி அருள் வந்து ஆடினார். இவ்வூர் மக்களைக் காக்க கோவிந்தன் வந்து இருப்பதாகக் கூறிய அவர் திடீரென காணாமல் போனார். இதை நேரில் பார்த்த அவ்வூர் மாயழகன் கோவிந்தனின் அருளால் குறி சொல்லும் கோடாங்கியானார்.அப்போது ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. சேதுநாட்டின் கோடாங்கிகள் பலரை அழைத்து பரிகாரம் கேட்டபோது, யாருக்கும் சரியாக கணிக்கத் தெரியவில்லை. அரண்மனை மருத்துவனின் கோரிக்கை படி கோடாங்கி மாயழகனை மன்னர் ராமநாதபுரம் அரண்மனைக்கு அழைத்திருந்தார். அங்கு தரையில் அமர்ந்து இரண்டு, மூன்று முறை உருட்டிய சோவிகள் அவருக்கு சேதி சொன்னது. ராணிக்கு வந்த நோயைச் சொல்லி, நோய்க்கு மருந்தும் சொல்லி, குறியும் சொல்லி முடித்து திருநீறை அள்ளிக் கொடுத்து ராணிக்குப் பூசச் சொன்னார் கோடாங்கி.திருநீறைப் பூசிய சில நொடிகளில் ராணி எழுந்து நடந்தாள். மனம் மகிழ்ந்த சேதுபதி ராஜா, கோடாங்கி மாயழகனிடம் “உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க சாமி” என்றார். “நீங்க நல்லா இருந்தா போதும் ராஜா. எனக்கு எதுவும் வேண்டாம்” என ஆசி கூறி அங்கிருந்து கிளம்பினார். சில நாட்களுக்குப் பின் எருமைப்பட்டிக்கு வந்த சேதுபதி ராஜா, அங்கு ஒரு சிறிய கோயிலை எழுப்பி, மரத்தாலான கோவிந்தன் சிலையை அமைத்து வழிபட்டார். கோடாங்கி மாயழகன் காலத்துக்குப் பின் அவருக்கு கருங்கல்லால் சிலை வைத்து தன் நன்றிக்கடனை செலுத்தினார் சேதுபதி ராஜா. இவ்வாறு அவர் கூறினார்.இக்கோயிலை நேரில் ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,தேக்கு மரத்தாலான கோவிந்தன் சிற்பம் 2 அடி உயரமும், ¾ அடி அகலமும் உள்ளது. காலைத் தூக்கிய நிலையில் உள்ள குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் கோவிந்தன் சிற்பம் இருபுறமும் நம்மைப் பார்ப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. கோடாங்கி மாயழகனின் கற்சிற்பம் கொண்டையிட்ட தலையுடனும் கும்பிட்ட கைகளுடனும் காணப்படுகிறது. கருங்கலக்குறிச்சி என்ற ஊருக்கு அருகில் இருந்த எருமைப்பட்டி தற்போது பேச்சில்லா கிராமமாக உள்ளது. இவ்வரலாற்றுக்குச் சான்றாக உள்ள கோயிலும், கோவிந்தன், கோடாங்கி ஆகியோர் சிற்பங்களும் 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இதேபோன்ற கோவிந்தன் கோயில் திருப்புல்லாணி அருகில் பள்ளபச்சேரியில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இடிந்துவிட்ட கோயிலும், அழியாத மரச்சிற்பமும், கைகூப்பி நிற்கும் கோடாங்கி மாயழகனின் கற்சிற்பமும், சேதுபதி ராஜாவையும் வரலாற்று நிகழ்வையும் நினைவு படுத்தும் ஆதாரமாக இன்றும் விளங்குகின்றன

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!