Home செய்திகள் பாம்பன் ரயில்வே நம்பர் கேட் 1 பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர ராஜ்யசபா எம்பி தர்மரிடம் மக்கள் கோரிக்கை

பாம்பன் ரயில்வே நம்பர் கேட் 1 பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர ராஜ்யசபா எம்பி தர்மரிடம் மக்கள் கோரிக்கை

by mohan

பாம்பன் ரயில் நிலைய நடைமேடை பகுதிக்காக மூடப்பட்ட நம்பர் ஒன் கேட்டை பாதிப்பின்றி கீழ் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி தெற்குவாடி,முந்தல்முனை, சின்னப்பாலம், தோப்புக்காடு, கே.கே நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடந்த 1914 ஆம் ஆண்டு முதல் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்போது பாம்பன் வடக்கு பகுதியில் இருந்து தென் பகுதிக்கு செல்ல ரயில்வே ஸ்டேஷன் அருகே மேற்கு பகுதியில் 3 ரயில்வே கேட் அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். பாம்பன் சாலை பாலம் அமைத்தபோது 3வது கேட் அருகே பாலத்தின் தூண்கள் நிறுவப்பட்டதால் 3 வது கேட் மூடப்பட்டது. இதனால் முதல் 2 கேட் மட்டும் இயங்கி வந்தது. இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டபோது நம்பர் 1 கேட் மூடப்பட்டது . அப்போது இப்பகுதி மக்கள் ரயில் நிலைய அதிகாரியிடம் முறையிட்டதில் நம்பர் 1 கேட் இடத்திற்கு மேல் பகுதியில் 5 அடி அகலத்தில் சுற்றுச்சுவர் அமைக்காமல் கீழ்ப்பகுதியில் கற்கள் மூலம் படி அமைத்தது 3 அடி உயர நடை மேடையில் ஏறி, இறங்கி ரயில் பாதையை மக்கள் கடந்து வந்தனர். இந்நிலையில் பாம்பன் ரயில்வே புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று முடியும் நிலையில், பாம்பன் ரயில் நிலைய நடை மேடை இடிக்கப்பட்டு தற்போதைய உயரத்தை விட அதிகமாக உயர்த்தி வேலை நடைபெறுகிறது. இதனால் வருங்காலத்தில்தெற்குவாடி,முந்தல்முனை, சின்னப்பாலம், தோப்புக்காடு, கே.கே நகர் பகுதி மக்கள் தென் பகுதி செல்லவும், தென் பகுதியிலிருந்து வட பகுதிக்கு செல்வோர் ஊருக்குள் ஒரு 1 கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டும். பாம்பன் தென் பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த வழி மூடப்பட்டால் புயல், வெள்ளம், இயற்கை சீற்றம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தென் பகுதி மக்கள் பாதுகாப்பிற்காக வட பகுதி செல்லும் இக்கட்டான சூழ்நிலை உள்ளது.பாம்பன் ரயில் நிலையம் தென் பகுதியில் 3,000-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மீட்டர் கேஜ் பாதை இருக்கும்போது 3 கேட்கள் மக்களின் போக்குவரத்திற்கு வழியாக இருந்தது. அகல ரயில் பாதை மற்றும் ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்கப் பணிகளுக்காக கேட்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை படி மாற்று ஏற்பாடு செய்து தருவதாக ரயில்வே நிர்வாகம் கூறியது. தற்போது 3 கேட்களும் மூடப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மூன்று கேட் இருந்த நிலையில் நம்பர் 1 கேட்டை மக்கள் வசதிக்காக சுரங்கப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என மே 1ஆம் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என பாம்பன் மக்களின் கோரிக்கையை ஏற்றுதவ்ஹீத் ஜமாத் தலைவர் ஹபிபுல்லா, துணைத் தலைவர் சாதிக் உல் அமீன், செயலர் அப்துல் காதர், மாவட்ட பொறுப்பாளர்கள் கலிபுல்லா, முஹமது சம்சுல் ஹூதா, தெற்கு வாடி கிராம தலைவர் முனீஸ்வரன், செயலர் சுரேஷ், ஓபிஎஸ் அணிமண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிமாரி, பாம்பன் ஊராட்சி செயலர் பாலசுப்ரமணியம் ஆகியோரிடம் ராஜ்யசபா எம்பி தர்மர் ஆலோசனை மேற்கொண்டார். இதை தொடர்ந்து ரயில்வே கேட் மூடப்பட்ட பகுதியை தர்மர் எம்பி பார்வையிட்டார்.சுரங்கப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரயில்வே அமைச்சகத்திடம் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தர்மர் எம்பி உறுதியளித்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com