கந்து வட்டி கும்பல் மிரட்டலுக்கு அஞ்சியஆசிரியர் தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே அக்காள் மடம் பகுதியை சேர்ந்தவர் பூமாரியப்பன், 52. இவர் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். இவருக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகள் கல்வி செலவிற்கு மாத வட்டிக்கு பணம் வாங்கினார். கடன் தொகைக்கு உரிய நேரத்தில் வட்டி செலுத்தி வந்தார். நண்பர்கள் சிலர் இவரிடம் அவசரத் தேவைக்கு வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினர். இதனால் பூ மாரியப்பன் வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி கட்ட முடியாமல் மனமுடைந்தார். இதனால் கடன் தொகை வட்டிக்கு மேல் வட்டியால், இரு மடங்காக உயர்ந்தது. வட்டி, அசல் தொகையை கேட்டு பணம் கொடுத்தவர்கள் , பூமாரியப்பன் வீட்டிற்கு சென்று தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்தனர்.இதற்கு பயந்த ஆசிரியர் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமேஸ்வரம் தீவு பகுதியில் கந்து வட்டி கொடுமை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஆசிரியர் ஒருவர் கந்து வட்டி கொடுமைக்கு உயிரிழந்தது மிகப்பெரிய வேதனை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் தற்கொலை செய்ய காரணமாக இருந்த கந்து வட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பூமாரியப்பன் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்