Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அண்ணலாரின் பணிவும், பரிவும்! – ரமலான் சிந்தனை – 3, கீழை ஜஹாங்கீர் அரூஸி…

அண்ணலாரின் பணிவும், பரிவும்! – ரமலான் சிந்தனை – 3, கீழை ஜஹாங்கீர் அரூஸி…

by ஆசிரியர்

நிலையில்லா உலக வாழ்வில் சில காலம் அடையாளமாய் தங்கி விட்டு போகும் மனிதனுக்கு பணிவும், பரிவும் அவசியம் என்பதை இறைதீர்க்கதரிசியான நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமது வாழ்வியல் மூலம் உணர்த்தி சென்றுள்ளார்கள். வயதில் மூத்தவர்களிடம் பணிவு காட்டுவதும் வயதில் சிறியவர்களிடம் அன்பென்னும் பரிவு காட்டுவதும் நபிகளாரின் அழகிய பண்புகளாய் இருந்ததற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

ஒருமுறை மக்கத்து முஹாஜிர்களும் மதீனத்து அன்ஸார்களும் மஸ்ஜிதுன் நபவியில் அண்ணலாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, ஓர் ஒட்டகம் அங்கு வந்து நபியவர்களுக்கு தலை தாழ்த்தி மரியாதை செலுத்திற்று. அதைக்கண்ட நபித்தோழர்கள், இறைத்தூதர் அவர்களே, உங்களுக்கு மிருகங்களும் மரங்களும் தலை தாழ்த்தி மரியாதை செலுத்துகின்றன, எனினும் அதற்கு முற்றிலும் தகுதியானோர் நாங்கள் தாம் என்றனர். அதாவது அண்ணலாருக்கு தலை தாழ்த்தி மரியாதை செய்வது நபித்தோழர்களுக்குரிய உரிமை என கருதினர்.

அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் இரட்சகனான அல்லாஹ்வுக்கு தலை தாழ்த்துவதே சிறந்தது, உங்கள் சகோதரர்களை கண்ணியப்படுத்துங்கள். அன்றி, மனிதருக்கு மனிதர் தலை தாழ்த்தி மரியாதை செய்ய நான் கூறுவேனாயின், மனைவியானவள் தன் கணவனுக்கு ஸுஜூது செய்து வணங்கும்படிக் கூறியிருப்பேன்” என்று விளக்கினார்கள்.(நூல்: முஸ்னது அஹ்மத்)

அதாவது மனிதருக்கு மனிதர் கண்ணியம் செய்யவேண்டுமே தவிர தலை தாழ்த்தி மரியாதை செய்யக்கூடாது என்னும் மனித சகோதரத்துவத்தையும், தலை வணங்குவது இறைவனுக்கானதென்ற இறைக்கடமையையும் அருமையாக நபியவர்கள் உணர்த்திவிட்டார்கள்.

அண்ணலாரின் அன்புக்கும் பரிவுக்கும் சான்றாக, வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைக் கடந்து செல்ல நேர்ந்தால், நபியவர்கள் அச்சிறுவர்களுக்கு “ஸலாம்” கூறுவார்கள். (நூல்: புகாரி – 5873, முஸ்லிம்: 2168)

ஒருநாள் தம்முடைய பேரக்குழந்தையான இமாம் ஹஸன்(ரலி) அவர்களைத் தூக்கியெடுத்து நபியவர்கள் முத்தமிட்டார்கள். அப்போது அக்ர உ பின் ஹாபிஸ் (ரலி) என்ற நபித்தோழர், யா ரசூலுல்லாஹ் எனக்குப் பத்து பிள்ளைகள் இருக்கின்றார்கள்; அவர்களில் ஒருவரைக் கூட ஒருமுறை கூட நான் முத்தமிட்டதில்லை! என்றார்.

அந்த தோழரை ஏறிட்டுப் பார்த்து விட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இரக்கமில்லாதவர், பிறரால் இரக்கப்பட மாட்டார்” என்று கூறினார்கள்.(புகாரி : 5997)

கிராமவாசி ஒருவர் நபியவர்களிடம் வந்து குழந்தைகளை முத்தமிடலாமா? ஆனால் நாங்கள் முத்தமிடுவதில்லை என்றார்; இதனைக் கேட்ட நபியவர்கள் “உமது இதயத்திலிருந்து அல்லாஹ் இரக்கத்தைக் கழற்றிய பிறகு, உமக்காக நான் வேறு என்ன சொல்ல முடியும்?” என்றார்கள்.(புகாரி : 5998)

சிறுவர் சிறுமியரை வீதியில் கண்டால், அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் போக நாடிய இடம் வரைச்சென்று விட்டு விட்டு திரும்புவார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.(இப்னுமாஜா)

சிறார்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்பதை தமது வாழ்வியல் நடைமுறையாக நமக்கு கற்றுத்தந்த நபிகளாரின் வரலாற்றை படிப்பதோடு நாம் கடந்து செல்கிறோமே தவிர சிறுவர்களிடம் நமது அன்பையும் பரிவையும் காண்பிக்கிறோமோ?

குழந்தைகளை கொஞ்சுங்கள், அவர்கள் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் தூக்கி அணைத்து முத்தமிடுங்கள், அவர்களோடு சில மணித்துளிகளாவது விளையாடுங்கள், இந்த ரமலான் காலங்களில் அவர்களோடு அமர்ந்து அவர்களின் மழலை மொழியில் பேசவிட்டு ரசனை கொள்ளுங்கள்.

முடிந்தால் அவர்களுக்கு அழகிய முறையில் கலிமா, துஆ, சூரா போன்றவற்றை மனம் செய்து கொடுங்கள். பிறகு அவற்றை அவர்கள் நாவினால் சொல்ல சொல்லி அதை ரசனை கொள்ளுங்கள். நம் பிள்ளைகள் தானே? என்று அழிச்சாட்டியம் கொள்ளாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களோடு கொஞ்சி விளையாடுங்கள்; இதுவும் அண்ணலாரின் அழகிய சுன்னா தான்.

“நற்குணத்தை நிறைவுபடுத்தவே நான் இறுதி இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்” என்று நபி (ஸல்) அவர்கள் அடிக்கடிக் கூறுவார்கள்.(புகாரி,முஸ்லிம்)

அண்ணலாரின் நற்குணம் என்பது பணிவும் பரிவும் தான், அதனை நம்மில் ஒவ்வொருவரும் உள்வாங்கிக் கொண்டு பெரியோர்களுக்கு பணிவு காட்டுவதையும், சிறியோர்கள், குழந்தைகளுக்கு பரிவு காட்டுவதையும் வாழ்க்கையின் ஓர் அம்சமாக்கி கொள்வோம்.

-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!