அரசு முத்திரை அவமதிப்பு…. இராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

 வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்க முயன்ற பாஜக.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் இன்று (01/12/2020) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  நேற்று (30/11/2020) அரங்கேற்றிய சம்பவத்தை கண்டித்தும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து அலுவலகத்தை பூட்டிய செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலர் செல்வக்குமார் கண்டன உரை பேசினார். மாவட்ட செயலர் சோமசுந்தர், தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் விஜயகுமார் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி பெண் அலுவலரை தாக்க முயன்றதுடன், அரசு வாகன முகப்பில் பெயர் பலகையில் இருந்த தமிழக அரசு சின்னத்தை செருப்பு அணிந்த காலில் எட்டி உதைத்து அவமதித்த வாலிபர் உள்பட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் வலியுறுத்தப்பட்டது.