Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் “தமிழ் கனவு” பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி..

தென்காசி மாவட்டத்தில் “தமிழ் கனவு” பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கிடையே தமிழர்களின் மரபையும் தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் “தமிழ் கனவு” பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி 01.09.2023 அன்று ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கையேடும் தமிழ்ப் பெருமிதம் என்கின்ற கையேடும் வழங்கப்பட்டது. இதில் தமிழ் பெருமிதம் கையேட்டில் உள்ள ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள தகவல் குறித்து ஒரு நிமிடத்தில் தங்களுடைய சிறப்பான கருத்துக்களை தெரிவித்த மாணவ, மாணவிகளை பாராட்டி பெருமித செல்வன் மற்றும் பெருமதிச் செல்வி என்கின்ற பட்டத்தோடு பரிசு வழங்கப்பட்டன. நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி வழிகாட்டி குறித்த கண்காட்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பிலும், இதர கடன் உதவிகள் தொடர்பான கண்காட்சி மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தாட்கோ நிறுவனத்தின் சார்பிலும், புத்தக அரங்குகள் மாவட்ட நூலகத்தின் சார்பிலும், சுய உதவி குழு தயாரித்த பொருட்களின் கண்காட்சி அரங்குகளும், முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலம் நான் முதல்வன் என்ற கண்காட்சி அரங்குகளும், மாவட்ட திறன் பயிற்சி துறை கண்காட்சி அரங்குகளும், மாவட்ட தொழில் மைய கண்காட்சி அரங்கு ஆகிய அரங்குகளில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி பேசியதாவது, தமிழ் இணையக் கல்விக் கழகமும் மாவட்ட நிர்வாகமும், ஒன்றிணைந்து மாபெரும் தமிழ்க் கனவு என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வைக் கடந்த ஆண்டில் சிறப்பாக நடத்தி முடித்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில், 200 சொற்பொழிவுகள், 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் நிகழ்வு நடத்தப்பட்டது. இதன் 100-வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க அடுத்த கட்ட நிகழ்ச்சியானது 2023 ஜூலை மாதம் தொடங்கியுள்ளது. உலகின் செழித்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையான தமிழ்ப் பண்பாட்டின் பெருமைகளையும் வளமையையும் அது எதிர்கொண்ட சவால்களையும் மாணவர்களாகிய உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்கானதே இந்நிகழ்வு. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, கல்விப் புரட்சி, அரசின் திட்டங்கள், அவற்றைச் செயல்படுத்தும் முறைகள் முதலிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்தூன்றிப் படித்துப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், இங்கு பகிரப்படும் கருத்துகளைக் கேட்டு, நீங்கள் பயனடைவதுடன் பிற மாணவர்களிடமும் இந்தக் கருத்துகளைக் கொண்டு சேர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், உயர்கல்வி, வேலை வாய்ப்பு, வங்கிக் கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகக் காட்சி அரங்கும் உள்ளது. மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ பரமகல்யாணி கல்லுாரி முதல்வர் முனைவர். மீனாட்சி சுந்தரம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பிரான்சிஸ், தென்காசி வட்டாட்சியர் சுப்பையன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!