Home செய்திகள் வரலாற்றிலேயே முதல் முறையாக நமது சங்கத்துக்குள் அதிகார அரசியல் புகுந்து சிலரின் வஞ்சக விளையாட்டுக்குள் சங்கம் சிக்கி தவிக்கிறது.பூச்சி எஸ்.முருகன்.!

வரலாற்றிலேயே முதல் முறையாக நமது சங்கத்துக்குள் அதிகார அரசியல் புகுந்து சிலரின் வஞ்சக விளையாட்டுக்குள் சங்கம் சிக்கி தவிக்கிறது.பூச்சி எஸ்.முருகன்.!

by Askar

தென்னிந்திய நடிகர் சங்கம் இப்போது எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். வரலாற்றிலேயே முதல் முறையாக நமது சங்கத்துக்குள் அதிகார அரசியல் புகுந்து சிலரின் வஞ்சக விளையாட்டுக்குள் சங்கம் சிக்கி தவிக்கிறது. கலைவாணர் என்.எஸ்.கே., எம்.ஜி.ஆர்.,டாக்டர் கலைஞர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் என சங்கத்தின் முன்னோர்கள் கண்ட கனவை நனவாக்க நாம் மேற்கொண்ட 10 ஆண்டுகால போராட்டம் இப்போது இறுதிகட்டத்துக்கு வந்து இருக்கிறது. சிறுக சிறுக சேர்த்து சிரமப்பட்டு போராடி கட்டிய கட்டிடத்துக்குள் சில நச்சு பாம்புகள் புகுந்து மொத்த கட்டடத்தையே கைப்பற்றி சுயலாபம் பார்க்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு அதிகார வர்க்கமும் துணை நிற்பதால் இக்கட்டான நிலையில் இருக்கிறோம். நடிகர் சங்கத்தில் இருக்கும் உண்மையான உறுப்பினர்கள் என் எண்ண ஓட்டத்தை புரிந்துகொள்வீர்கள் என்றும் உங்களது கவலையும் , இதுவாக தான் இருக்கும் என்பதையும் அறிவேன். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். கவ்விக்கொண்டு இருக்கிறது. ஆனால் இறுதியில் தர்மம்தான் வெல்லும். அதை யாராலும் மாற்ற முடியாது. எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை தளர வேண்டாம் என்பதற்கான சிறிய எண்ண பகிர்வு தான் இது. 1980ல் இருந்து நாடகங்களில் நடித்துக்கொண்டு இருந்த நான்1987ல் தொழில்முறை நடிகனானேன். 2009 இல் நியமன செயற்குழு உறுப்பினரான நான் அதன்பின் ராதாரவியே அசந்துபோகும் அளவுக்கு சங்க உறுப்பினர்களுக்கு உதவிகள் செய்தேன். 2010ல் சங்க கட்டடத்தை சரத்குமார் ராதாரவி மூலமாக லீசுக்கு விடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. எஸ்பிஐ சினிமாவிடம் பேசி ஒப்பந்தம் போட்டபிறகே அந்த ஒப்பந்தத்துக்கான அனுமதி கேட்கிறார்கள். தேதிகளில் இருக்கும் முரண்பாடுகளை கண்டு கேள்வி கேட்க தொடங்கினேன். எனவே என்னை சங்கத்தில் இருந்து ஒதுக்கினார்கள். சிவகுமார், பிரபு, சோ, ராஜேஷ் போன்ற மூத்த நடிகர்களை கொண்டு ஒரு சப்கமிட்டி அமைத்து கட்டட விவகாரத்தை விடலாம் என்று சொன்னேன். என் யோசனையை கிடப்பில் போட்டார்கள். சரத்குமார் செயற்குழுவில் பேசியது எனக்கு நிறைய நெருடல்களை ஏற்படுத்தியது. தீர்மான நகல்களை கேட்டால் தரவில்லை. எனவே பதிவாளர் அலுவலகம் மூலம் அந்த தீர்மான நகல்களை பெற்றதால் எல்லா முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வந்தன. செயற்குழு தீர்மானம் மட்டும் அல்லாமல் வேர் முதல் கிளைகள் வரையிலான அனைத்தும் எனக்கு தெரிய வந்தது. அவற்றை எல்லாம் ஆதாரமாக வைத்துதான் வழக்கு பதிவு செய்தேன். டிரஸ்ட் குளறுபடிகளை ஆராய்ந்த நீதிபதி சந்துரு டிரஸ்டே பொய் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். அப்பீல் போனதிலும் எனக்கு சாதகமாகவே முடிவு வந்தது. 2012ல் தேர்தல் நடத்தாமலேயே மீண்டும் பதவிக்கு வந்தவர்கள் தற்போது சங்க நிலத்தை தன்னிச்சையாக விற்ற வழக்கில் குற்றவாளி கூண்டில் நிற்கிறார்கள். அதன்பிறகு நடந்தவை தங்களுக்கு நன்றாக தெரியும். 2013 இல் விஷால் அவர்களுக்கு பிரச்சனை வரவே அவரை சந்தித்து பேசினேன். தனி நபராக நான் இழுத்துக்கொண்டு இருந்த தேரில் விஷால்,கார்த்தி,நாசர்,கருணாஸ், ராஜேஷ் மற்றும் சங்க நலனில் அக்கறை உள்ள பலரும் சேர அதன் பின் ஊரே திரண்டது. இளம் நடிகர்கள் ஒன்று சேர்ந்து புரட்சிக்கு வித்திட்டார்கள். என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள். நான் விளக்கம் அளித்தேன். தேர்தலுக்கு தயாரானோம். எனக்கு தேர்தலில் நிற்க விருப்பம் இருந்ததே இல்லை. அது தங்களுக்கு நன்றாக தெரியும். கருணாஸும் எஸ்வி.சேகரும் வற்புறுத்தியபோது கூட நான் மறுத்துவிட்டேன். நடிகர் சங்கத்தில் ஏகாதிபத்தியமாக ஆண்டு வந்த சரத் குமார், ராதாரவி அணிக்கு முடிவு கட்டி பொறுப்புக்கு வந்தோம். பொறுப்புக்கு வந்ததும் முதல் வேலையாக சங்க கட்டடம் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டு சொந்த கட்டடம் கட்டுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கினோம்… அரசை நம்பாமல் முழுக்க முழுக்க நடிகர்களின் சொந்த உழைப்பால் கட்டடம் உயர்ந்தது. இது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை தான். இன்று உயர்ந்து நிற்கும் கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் ஒட்டுமொத்த நாடக நடிகர்களின் வியர்வையால் கட்டப்பட்டவை. இப்போது எழுந்துள்ள பிரச்சினை, வழக்குகள் அனைத்துமே தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போராட்டம். நியாயத்துக்கும் நயவஞ்சகத்துக்கும் நடக்கும் மோதல். நம்முடனேயே இருந்துகொண்டு நம் முதுகிலேயே குத்தி நமது பாரம்பரிய சொத்தை அபகரிக்க நினைக்கும் நாடகம். கடந்த 10 ஆண்டுகளாக முழுக்க முழுக்க அகிம்சை, நேர்மை வழியில் நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் மூலம் மட்டுமே நாம் செயலாற்றுகிறோம். குறுக்கு வழியை எந்த சூழ்நிலையிலும் தேர்ந்தெடுத்தது இல்லை. நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பணத்தால் நீதியை விலை பேசி வாங்கி விடலாம் என்று முயற்சி செய்து நீதிபதியால் கடுமையாக கண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட ஐசரி கணேசன் தான் இப்போது தேர்தலே செல்லாது என்று பொய்யை பரப்பி வருகிறார்கள். இதிலிருந்தே எல்லோருக்கும் உண்மை புரியும். பணம் சம்பாதிப்பதற்காக எந்த தொழிலையும் செய்யலாம் எதையும் செய்யலாம் என்று குறுக்கு வழியில் வளர்ந்தவர்கள் சங்கத்தையும் சங்க கட்டிடத்தையும் அதே குறுக்கு வழியில் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இதை தடுக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நாம் நமது நேர்மையான வழியில் நீதிமன்ற சட்ட போராட்டம் வழியாகவே நமது சங்கத்தை மீட்டெடுப்போம். ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் உயர்நீதிமன்ற வழிகாட்டல்படி நடத்தப்பட்ட நேர்மையான நியாயமான தேர்தலை சதி மூலம் முடக்கிவிட முடியாது. சட்ட போராட்டம் வழியாக மட்டுமே நாம் நீதியை மீட்டெடுப்போம் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன். இந்த நிலையில் தங்களின் அன்பையும் ஆதரவையும் எப்போதும் போல் எதிர்பார்க்கிறேன்.

என்றும் அன்புடனும் ,நன்றியுடனும், பூச்சி எஸ்.முருகன்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com